சமூக வலைதளம் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் சினிமா ஆசை காட்டி பல பெண்களிடம் மோசடி செய்ததோடு, இளம் பெண்ணை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்யவிருந்த புது மாப்பிள்ளை விக்ரம் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சினிமாவில் பின்னணிக் குரல் கலைஞராக பணிபுரியும் இளம்பெண் ஒருவர், தனது காதலன் விக்ரம் வேதகிரி என்பவர் தன்னை ரகசிய திருமணம் செய்துகொண்டு , தன்னுடன் குடும்பம் நடத்தி ஏமாற்றிவிட்டு, தற்போது வேறோரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாவும், அவரது செல்போனில் பல பெண்களை காதலித்து ஏமாற்றி அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோக்களும், வாட்ஸ் அப் சாட்டிங்குகளும் இருப்பதாகவும் புகாரில் தெரிவித்தார்.
இதுகுறித்து வில்லிவாக்கம் மகளிர் போலீசாரிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் செவ்வாய்கிழமை புகார் அளித்திருந்தார்.
உயர் அதிகாரிகள் உத்தரவையடுத்து வில்லிவாக்கம் மகளிர் போலீசார், இன்று நடைபெற இருந்த திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த புது மாப்பிள்ளையான விக்ரம் வேதகிரி என்பவரை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர் பயன்படுத்திய ஸ்மார்ட் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி ஈமெயில் சமூக வலைதளக் கணக்கில் இருந்த விவரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் விக்ரம் வேதகிரி குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் அம்பலமாகின.
பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கடந்த 2020-ஆம் ஆண்டு விக்ரம் வேதகிரிக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. அதன்பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து வந்த நபர் ஒரு கட்டத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணுடன் குடித்தனம் நடத்தியுள்ளார்.
பல பெண்களுடன் தொடர்பில் இருந்த விக்ரம், அவர்களுடன் தனிமையில் இருப்பதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்திருப்பதை கண்டுபிடித்த அந்த பெண், இது குறித்து அவரிடம் கேள்வி கேட்டதால், அந்தப்பெண்ணை அம்போவென விட்டு விட்டு விக்ரம் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதள கணக்குகள் மூலம் மாடலிங் துறையை சேர்ந்த பெண்களிடம் தான் ஒரு வெப்சீரிஸ் எடுத்து வருவதாகவும், குறும்படம் எடுத்து வருவதாகவும் கூறி அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறி பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் தனியாக குடித்தனம் நடத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்து மிரட்டி போலீசில் புகார் அளிக்கவிடாமல் மிரட்டியது தெரியவந்துள்ளது.
அந்த பெண்களுடன் தனக்கு கிடைத்த அனுபவத்தை ஆபாச கதைகளாக எழுதி ஆபாச வெப்சைட்டுகளுக்கு விற்று வந்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது. மேலும், சொந்த குடும்ப பெண்கள், உறவினர்கள் பற்றியும் அருவருக்கத்தக்க ஆபாசக் கதைகள், மீம்ஸ்கள் என விக்ரம் தனது செல்போனில் தயார் செய்து எழுதி வைத்துள்ளதை கண்டு போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
கெட்டப்பை மாற்றி பெண்களுடன் நெருங்கி பழகி அவர்களது வாழ்க்கையை சீரழித்த புகாரில் விபரீத சைக்கோவாக வலம் வந்த விக்ரம் வேத கிரியை கைது செய்த போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனியாக வசிக்கின்ற பெண்கள் திருமண விஷயத்தில் உஷாராக இருக்க தவறினால் எந்த மாதிரியான சிக்கல் ஏற்பட்டும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.