சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 263ன் படி மாநிலங்களுக்கு இடையேயோன கவுன்சில் அமைக்கப்படும். மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள், அது தொடர்பான ஆலோசனைகள், மாநிலங்களின் நலனுக்கு தேவையான நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்து பரிந்துரைகளை வழங்கி கொள்கை முடிவுகளை ஒருங்கிணைப்பது இந்த கவுன்சிலின் முக்கியப் பணியாகும்.
இந்தியாவில் முதன்முறையாக சர்க்காரியா கமிஷன் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் கவுன்சில் ஆண்டுக்கு மூன்று முறை குறைந்தபட்சம் கூடுகிறது.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இந்த கவுன்சில் கூட்டம் ஒரு முறை நடந்துள்ளது. எனவே, இந்த கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் “மாநிலங்களுக்கிடையேயும் மற்றும் ஒன்றிய – மாநிலங்களுக்கிடையேயும் எழும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அவற்றிற்கிடையே ஒத்துழைப்பையும், கூட்டாட்சி உறவுகளையும் வலுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கவுன்சிலின் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்திட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.