சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், “தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரியில் மேகதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் அநீதியைத் தடுக்க அனைவரும் இங்கே ஒன்றுபட்டு போராடி வரும் நிலையில், ஆட்சியிலுள்ள தி.மு.க.அரசு இதனை மிக நுணுக்கமாகவும், விரைவாகவும் முன்னெடுத்துச் செல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது.
போராடுவது போல் போராடி கடைசியில் உரிமையை விட்டுக்கொடுத்து விட்டு வருவதை தி.மு.க வாடிக்கையாக கொண்டிருக்கிறது என்பது கடந்த காலங்களில் தமிழகம் உணர்ந்திருக்கிறது.
மேகதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ‘தி.மு.க இன்று ஆட்சியில் இருப்பதுதான் நமக்கு பயம். இவர்கள் உரிமையை நிலைநாட்டுவார்களா என்ற அச்சம் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாட்டு அணை குறித்த விவகாரம் கூட்டப் பொருளாக வைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் தி.மு.க. அரசு முறையிட்டதற்கு எந்தப் பலனும் இல்லாமல் உள்ளது. மத்திய சட்ட அமைச்சகமோ ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாக ஆலோசனை வழங்குகிறது.
மேகதாட்டு அணைப் பிரச்னையில் கர்நாடக அரசின் முயற்சி தொடர்ந்து முன்னேறிக் கொண்டு வருவதையும், தமிழக அரசின் முயற்சி எந்தப் பலனையும் அளிக்காமல் இருப்பதையும் மிக அபாயமான அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் வரும் ஜுன் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வார கால அவகாசத்தை மிகச் சரியாக பயன்படுத்தி சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான முயற்சிகளை தி.மு.க அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் மற்றும் தி.மு.க.வின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் முகாமிட்டு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வகையிலும் காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாட்டு அணை குறித்த விவாதம் எழாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மத்திய அரசும் காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் நியாயத்தை உணர்ந்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.