புதுடெல்லி: முப்படைகளில் 4 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு மத்திய துணை ராணுவ படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவில் சேர முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ராணுவம், கடற்படை, விமானப் படைக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இதன்படி 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் முப்படைகளில் சேரலாம். தற்போதைய கல்வித் தகுதி, உடற்தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும். புதிய திட்டத்தில் பணியில் சேருவோர், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். 4 ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு நிரந்தர பணிக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களின் திறன் அடிப்படையில் நிரந்தர பணி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து 4 ஆண்டு பணியை முடிக்கும் அக்னி வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் சேர முன்னுரிமை வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில், “பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் பேரில் உள்துறை அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவின் மூலம், பயிற்சி பெற்ற இளைஞர்கள் (அக்னி வீரர்கள்) நாட்டைப் பாதுகாக்க தொடர்ந்து சேவை செய்ய முடியும். இந்த முடிவை செயல்படுத்த விரிவான திட்டம் வகுக்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.
73 ஆயிரம் இடங்கள் காலி
துணை ராணுவப் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் இப்போது 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. முப்படைகளில் 4 ஆண்டு பணி முடித்தவர்களை இந்தப் படைப் பிரிவுகளுக்கு சேர்ப்பதன் மூலம், பயிற்சிக்கான செலவு மற்றும் நேரம் மிச்சமாகும் என மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. இதனால்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.