நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 13/06/2022 அன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நேற்று முந்தினம் (14/06/2022) ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், டெல்லியில் உள்ள தனது இல்லத்திலிருந்து பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ராகுல் காந்தி தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜரானார்.
இரண்டாவது நாள் விசாரணையும் 10 மணிநேரத்திற்கு மேல் நீடித்தது. அதைத்தொடர்ந்து நேற்றும் (15/06/2022) அவரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கடந்த 2010-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது தொடர்பாகவும், ஏ.ஜே.எல்.பங்குதாரர்கள் ஒப்புதல் பெறப்படாதது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை இவ்வாறு இருக்க, இந்த வழக்கு சம்பந்தமாக 2015-ஆம் ஆண்டு விசாரணை செய்த அமலாக்கத்துறை வழக்குக்கான முகாந்திரம் ஒன்றும் இல்லை என முடிவு செய்யப்பட்டு அந்த வழக்கு நிறுத்தப்பட்டது. ஆனால் 2015-ல் முடிக்கப்பட்ட இந்த வழக்கை 2022-ஆம் ஆண்டு மோடி அரசு எடுத்து நடத்துவது அரசியல் பழிவாங்கல் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில். மேலும் இதில் பண பரிமாற்றமோ, பண பதுக்கலோ, ஏமாற்றமோ ஒன்றும் கிடையாது. 2010 முதல் 2015 வரை முறையாக வருமான வரித்துறை, குறிப்பாக சொசைட்டி ஆக்ட் பிரகாரம் அரசாங்கத்திற்குக் கணக்குகள் கொடுக்கப்பட்டது என்கிறார்கள். இதனையடுத்து ரூ.50 லட்சம் மட்டுமே கொடுத்து இன்று 2,000 கோடி ரூபாய் அளவுக்கான சொத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கோ, ராகுல் காந்தி உள்ளிட்டவரின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டது என்பது தான் சுப்பிரமணியன் சாமி போன்றவர்களது குற்றச்சாட்டாக இருக்கிறது.
ஆனால், 2015 முதல் 2022 வரை இடைப்பட்ட காலத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் மீது குறை கூற முடியாது என்கிற நேரத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் உருவாக்கினால், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்காமல் இருக்க முடியும் என்கிற உள்நோக்கத்தோடு தான் இந்த நேரத்தில் அமலாக்க துறையைப் பயன்படுத்தியுள்ளனர் என்கிறார்கள்.
அதோடு 2024 தேர்தலுக்காகத் தொடர்ச்சியாகக் காங்கிரஸ் செய்து வரும் வேலைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காகவே பொய்யான ஊழல் புகார் சொல்லிக் கட்டமைக்கின்றனர் என்பது காங்கிரஸாரின் வாதமாக இருக்கிறது. இதனையடுத்து சமீபத்தில் நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.க-வின் நுபுர் ஷர்மா கூறிய கருத்தினால் நாடு முழுவதுமுள்ள இஸ்லாம் அமைப்புகள், ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு போராடி வரும் சூழலில், அதைக் காங்கிரஸ் கையில் எடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த விவகாரத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்கிறார்கள் மற்றொரு தரப்பினர். ஆனால், சட்டம் தன் கடமையைச் செய்யும். நீதிமன்றங்களின் உத்தரவுகள் பேரிலே இந்த விசாரணை நடக்கிறது என்கிறார்கள் பா.ஜ.கவினர்.