‘டுபு டுபு’ சத்தம் மூலம் ஏற்கெனவே தமிழர்களின் மனதில் இடம் பிடித்த பிரிட்டிஷ் கம்பெனியான ராயல் என்ஃபீல்டு, இப்போது இன்னும் நமக்கு நெருக்கமாக இருக்கிறது. ஆம், ராயல் என்ஃபீல்டு மற்றும் அதன் சிஸ்டர் கம்பெனியான எய்ஷர் மோட்டார்ஸின் CEO (Chief Executive Officer) ஆக, மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒரு சுத்தத் தமிழரான கோவிந்தராஜனை நியமித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
1995–ல் பவர் ட்ரெயின் தயாரிப்பு யூனிட்டில் இன்ஜீனியராகத் தன் பணியைத் தொடங்கியவர், 2004–ல் ராயல் என்ஃபீல்டில் ஜெனரல் மேனேஜர் ஆனார். அதன்பிறகு, 2006–ல் டிவிஷனல் ஜெனரல் மேனேஜர், 2013–ல் இருந்து COO (Chief Operation Officer), ஆகஸ்ட் 2021–ல் இருந்து எக்ஸிக்யூட்டிவ் அதிகாரியாகவும் இருந்த கோவிந்தராஜன், இப்போது ராயல் என்ஃபீல்டு இந்திய டிவிஷனின் தலைமை நிர்வாக அதிகாரி. இது தவிர, EML (Eicher Motors Limited) நிறுவனத்துக்கும் இயக்குநராகவும் இருக்கிறார் கோவிந்தராஜன்.
இப்போதுள்ள கான்டினென்ட்டல் ஜிடி மற்றும் இன்டர்செப்டர் 650 போன்ற பைக்குகளின் Key Development ஏரியாவில் முக்கியப் புள்ளி – கோவிந்தராஜன். திருவொற்றியூர், ஒரகடம், வல்லம் என்று ராயல் என்ஃபீல்டின் தயாரிப்புத் தொழிற்சாலையில் பரபரவென இயங்கிய இவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்தான் தனது மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் டிகிரியை முடித்தார். மீட்டியார் 350 மற்றும் க்ளாஸிக் 350 போன்ற புல்லட்கள் கிண்ணென்ற கட்டுமானத்தில் தயாராகும் J-ப்ளாட்ஃபார்மில் முக்கியப் பங்கு உண்டு. சென்னைக்கு அருகில் உள்ள இந்த 3 தொழிற்சாலைகளில் இருந்துதான் க்ளாஸிக்கும், மீட்டியாரும், ஸ்க்ராம் பைக்குகளும் ஒரு நாளைக்கு 3,000 யூனிட்டுகள் வெளிவருகின்றன. ஓர் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் பைக்குகள் தயாரிக்கும் திறன் கொண்டவை இந்தத் தொழிற்சாலைகள். இந்தத் திட்டத்தின் முக்கியப் புள்ளியாக இயங்குபவர் – கோவிந்தராஜன்.
கோவிந்தராஜனின் தலைமையில் ராயல் என்ஃபீல்டு, லண்டனில் ஓர் அட்டகாசமான தொழில்நுட்ப மையத்தை நிறுவியது. ட்வின் சிலிண்டர் செட்அப் கொண்ட இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி, நம்மூரில் வேண்டுமானால் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், குளோபலாக இந்த இரண்டு மாடல்களும் செம ஹிட். அதற்கும் கோவிந்தராஜனின் ஐடியாக்களே மூலதனம்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இப்போது கொஞ்சம் மகிழ்ச்சியில் திளைப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. போன ஆண்டு வரை RE-ன் சேல்ஸ் சார்ட்டில், 22,000 வாகனங்கள்தான் ஒரு மாதத்துக்கான விற்பனை எண்ணிக்கை இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மே மாதம் மட்டும் சுமார், 53,525 பைக்குகளை விற்றுத் தள்ளியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இது சேல்ஸ் கிராஃபில் 16% விற்பனை அதிகம். அதேபோல், ஆண்டுக்குக் கணக்கிடும்போது, 56 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருக்கிறது.
மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் உண்டு. பொதுவாக, இந்தியாவில் மட்டும்தான் RE புல்லட்கள் ‘டப் டுப்’ எனச் சீறும். ஆனால், இப்போது ஏற்றுமதியிலும் கலக்க ஆரம்பித்து விட்டது ராயல் என்ஃபீல்டு. ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் என்று குளோபலாகவும் திரிய ஆரம்பித்து விட்டன புல்லட்கள். மொத்தம் 60 நாடுகளில் இந்த டுபு டுபு சத்தம் பிரசித்தம்.
அதற்கும் அடிக்கோலிட்டவர் கோவிந்தராஜன். இந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 21,000 பைக்குகளை ஏற்றுமதி செய்திருக்கிறார்களாம். க்ளாஸிக் 350 புல்லட்டுக்குப் பிறகு, வெளிநாடுகளில் நம் ஊர் அட்வென்ச்சர் பைக்கான ஹிமாலயனுக்கு நல்ல மவுசு என்கிறார்கள்.
ராயல் என்ஃபீல்டின் புத்தம் புது தலைமை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜனைத் தொடர்பு கொண்டபோது இப்படிச் சொன்னார். ‘‘ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராயல் என்ஃபீல்டுக்கு இந்த டிசம்பரோடு 120 வயது ஆகிறது. இந்தியாவில் மட்டும்தான் ராயல் என்ஃபீல்டுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்று நினைத்தேன். இப்போது உலகம் பூராவும் எங்கள் பைக்குகளுக்கு ரசிகர்கள் இருப்பதை நினைத்தால் சந்தோஷம் இருக்காதா! அதற்கு இந்த விற்பனை எண்ணிக்கையே சாட்சி! எங்கள் அடுத்த ஐடியா, டீலர் நெட்வொர்க்கைப் பெருக்குவதுதான்! இந்தப் பெருமை எல்லாமே ராயல் என்ஃபீல்டு டெக்னீஷியன்களுக்கும், ஊழியர்களுக்கும்தான் போய்ச் சேரும். அதோடு, உங்களுக்கும்தான்.. (வாடிக்கையாளர்களுக்கும்!)’’ என்று சுருக்கமாகச் சொன்னார் கோவிந்தராஜன்.
அதே மகிழ்ச்சியில்தான் ஸ்க்ராம் 411 பைக்கைக் கொண்டு வந்தது ராயல் என்ஃபீல்டு. ADV என்று சொல்லக்கூடிய அட்வென்ச்சர் பைக்கான இது கிட்டத்தட்ட ATV (All Terrain Vehicle) ஆகச் செயல்படும் அளவுக்கு, அதாவது எப்படிப்பட்ட டெரெய்ன்களிலும் ஓடும் அளவுக்குக் கட்டுமானத்துடனும், ஓட்டுதல் தரத்துடனும் வந்திருக்கிறது. ஸ்க்ராம் 411–ன் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டின்போது இதை நாமே உணர்ந்தோம்.
ஒரு தமிழர் தலைவரான மகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில், ராயல் என்ஃபீல்டு பிரியர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது. ஸ்க்ராம் 411 பைக்கைத் தொடர்ந்து 350 சிசி, 450 சிசி, 650 சிசி என்று வெரைட்டியான சிசிகளில் பைக்குகளை அடுத்த ஆண்டுக்குள் கொண்டு வரவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.