கேரள மாநிலம், கொச்சி ரவிபுரத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காக பெண்கள் உள்பட பலர் அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி, வளைகுடா நாடுகளில் செல்வந்தர்களின் வீடுகளில் குழந்தைகளை பராமரிக்க இளம்பெண்கள் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டது. சம்பளமாக மாதம் ரூ60 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த விளம்பரத்தைப் பார்த்து ஏராளமான இளம்பெண்கள் வேலைக்கு விண்ணப்பித்தனர். கேரளா மட்டுமல்லாது பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த பெண்களும் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளனர். இப்படி விண்ணப்பித்தவர்களில் அந்த நிறுவனத்தின் ஆட்கள் தங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு செல்லும் இளம்பெண்கள் அடிமை வேலைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த நிறுவனத்தினர் ஒவ்வொருவரையும் ரூ9.50 லட்சத்திற்கு அடிமை வேலைக்காக அங்குள்ள செல்வந்தர்களுக்கு விற்பனை செய்து வந்து உள்ளனர். ஆகவே பல கொடுமைகளை அனுபவித்த இளம்பெண்கள் உறவினர்களுக்கு விவரங்களை தெரிவித்து இருக்கின்றனர். இதையடுத்து துபாய், குவைத், பஹ்ரைன் உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய அமைப்புகள் 3 இளம்பெண்களை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.அதைத் தொடர்ந்து, கேரளா திரும்பிய கொச்சியை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் கொச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். தொடர்ந்து கடந்த மே 18ம் தேதி இதுகுறித்து கொச்சி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். போலீசாரின் விசாரணையில் இந்த கடத்தல் கும்பலுக்கு கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த மஜீத் என்பவர் தான் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்தது.இதற்கிடையே சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை அமைப்புகளுக்கு தெரியவந்தது. உடனடியாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. வளைகுடா நாடுகளுக்கு அடிமை வேலைக்கு விற்கப்படும் பெண்களில் சிலர் சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு உள்ளது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.அடிமை வேலைக்கு மறுக்கும் பெண்களை இந்த கும்பல் சிரியாவுக்கு கடத்திச் சென்று ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்து உள்ளனர். அந்த இளம்பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது காம இச்சைகளுக்கு பயன்படுத்தி வருவதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. எத்தனை பெண்கள் இவ்வாறு சப்ளை செய்யப்பட்டு உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.குவைத்திலிருந்து தப்பி கேரளா வந்த இளம்பெண்ணின் கணவர் தனது மனைவிக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து கூறியது: குவைத்திலுள்ள அரபியின் வீட்டில் குழந்தைகளை பராமரிக்க என்று கூறித் தான் எனது மனைவியை எர்ணாகுளத்தில் உள்ள அஜு என்பவரின் உதவியுடன் அனுப்பி வைத்தேன். விசாவுக்கு பணம் தேவையில்லை என்று அவர் கூறினார். ஆனால் அங்கு சென்ற பிறகு எனது மனைவிக்கு குழந்தைகளை பராமரிக்கும் வேலை கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக நாள் முழுவதும் வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமைப்படுத்தினர். அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.தவறினால் அரபியின் மனைவி அடித்து கொடுமைப்படுத்துவார். தினமும் ஒருவேளை மட்டும்தான் உணவு கொடுக்கப்பட்டது. அதுவும் ரொட்டியும், ஊறுகாயும் மட்டும்தான் கொடுத்தனர். கொடுமை தாங்க முடியாமல் ஊருக்கு செல்ல வேண்டும் என்று அரபியிடம் எனது மனைவி கூறினார். இதையடுத்து மனைவியை அங்குள்ள ஏஜென்டான கண்ணூரை சேர்ந்த மஜீத்திடம் ஒப்படைத்துள்ளார்.இவர்தான் இந்தியாவிலிருந்து இளம்பெண்களை கடத்துவதில் முக்கிய தலைவனாக செயல்பட்டு வருகிறார். பின்னர் எனது மனைவியை ஒரு அறையில் பூட்டி வைத்து தினமும் பூட்ஸ் காலால் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். அங்கும் ஒரு வேளை உணவு மட்டும் தான் கொடுக்கப்பட்டது. அந்த சிறிய அறையில் எனது மனைவி மட்டுமில்லாமல் மேலும் 3 பெண்கள் இருந்தனர்.அவர்களை மஜீத்தும், அவரது ஆட்களும் சேர்ந்து அடித்து கொடுமைப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக எனது மனைவி செல்போனை மறைத்து வைத்திருந்தார். அதன் மூலம், யாருக்கும் தெரியாமல் என்னை அழைத்து விவரத்தை கூறினார். மேலும் அங்குள்ள கேரள சங்கத்தினருக்கும் அவர் விவரத்தை கூறினார். இதற்கிடையே நான் எர்ணாகுளத்தில் உள்ள அஜுவிடம் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்று கூறினேன். ஆனால் அதற்கு அவர் ரூ3 லட்சம் பணம் கேட்டார். நான் எனது குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவர் காலில் விழுந்து கெஞ்சினேன்.ஆனால், அவர் பணம் தராமல் மனைவியை காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டார். இதனால் தான் நான் ஒரு வக்கீல் மூலம் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் புகார் கொடுத்தேன். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் தான் எனது மனைவி உட்பட 3 பேரை அங்கிருந்து காப்பாற்ற முடிந்தது. குவைத்தில் இருந்து இதே போல வரும் பல இளம்பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்வதாக பின்னர் தெரியவந்தது. தக்க நேரத்தில் காப்பாற்றி இருக்காவிட்டால் எனது மனைவி உள்பட அறையில் இருந்த பெண்களையும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்திருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.