வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாக்பூர்: மஹாராஷ்டிராவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் ரூ.500 எடுக்க சென்றவருக்கு ஐந்து மடங்கு அதிக பணம் வந்த தகவல் வேகமாக பரவிய நிலையில், அப்பகுதி மக்கள் ஏ.டி.எம் வாசல் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது கபர்கெடா நகரம். இங்குள்ள ஏ.டி.எம் ஒன்றில் ஒருவர் பணம் நேற்று (ஜூன் 15) எடுக்க சென்றுள்ளார். ரூ.500 கோரி ஏ.டி.எம்., மெஷினில் பதிவு செய்த அவருக்கு ஐந்து 500 ரூபாய் நோட்டுகள் என ரூ.2500 வந்துள்ளன. ஆனால் தனது கணக்கில் இருந்து ரூ.500 மட்டுமே குறைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் ரூ.500 எடுக்க முயற்சித்தார். அப்போதும் ரூ.2500 வந்துள்ளது.
தான் கோரிய பணத்தை விட ஐந்து மடங்கு அதிகமான பணத்தை ஏ.டி.எம் தரும் தகவல் காட்டுத்தீ போல அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால், மக்கள் பெருமளவில் ஏ.டி.எம் வாசலில் பணமெடுக்க குவிந்தனர்.
இது குறித்து வங்கி வாடிக்கையாளர் ஒருவர் உள்ளூர் போலீசுக்கு தகவல் கூறியதும், ஏ.டி.எம் மையத்தை போலீசார் மூடியதுடன், வங்கிக்கும் தகவல் தெரிவித்தனர். இது குறித்து வங்கி அதிகாரி கூறுகையில், ‛தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏ.டி.எம் மையத்தில் கூடுதல் பணம் வந்துள்ளது. மெஷினில் ரூ.100 நோட்டுகள் வைக்கும் டிரேயில் தவறுதலாக ரூ.500 நோட்டுகளாக வைத்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை’ என்றார்.
Advertisement