விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயில் அருகே செயல்பட்டு வருகிறது தமிழ் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு நேற்றைய தினம் (15.06.2022) பட்டம் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, நேற்று காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பொன்முடி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, விழுப்புரம் மாவட்டத்தின் மற்றொரு அமைச்சரான செஞ்சி மஸ்தானும் அங்கு திடீரென வருகை தந்தார். அழைப்பிதழில் பெயர் இல்லாத போதும், செஞ்சி மஸ்தான் பட்டமளிப்பு விழாவிற்கு வருகைதந்தது பெரும் பேசுபொருளானது. அவர், அழையா விருந்தாளியாக வந்ததாகவும், தன்னுடைய வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரி என்பதால் பொன்முடிக்கு போட்டியாக அங்கு வந்தார் எனவும் சர்ச்சை பேச்சுக்கள் எழுந்தன. அப்போது, வி.ஐ.பி-க்கள் அமரும் இருக்கை கொண்டுவரப்பட்டு, மேடையின் எதிரே அவருக்கு போடப்பட்டது. இருப்பினும் அந்த இருக்கையை வேண்டாம் எனக்கூறிவிட்டு, மாணவர்களின் முன் வரிசையில் அமர்ந்துக்கொண்டார் அவர்.
மஸ்தான் வந்ததை கண்ட பொன்முடி, மேடையில் பேசும்போது… “அமைச்சர் மஸ்தானுடைய பேரை அழைப்பிதழில், வரவேற்புரையிலாவது போட்டிருக்கலாமே..! அடுத்தமுறை அவர் பேரை போட்டிடுங்க. நிகழ்ச்சி என்று அழைத்தால், அவர் சரியாக வந்துவிடுவார்” என்று கல்லூரி நிர்வாகத்தினரை பார்த்து கூறியிருக்கிறார். இந்தச் சம்பவம் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிக கவனம் பெற்றிருந்தது.
இந்நிலையில், கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு சென்றது குறித்தும், சர்ச்சை கருத்துகள் குறித்தும் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் பேசினோம். “சரியான நெறிமுறைபடிதான் பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நானும் அமைச்சராக இருக்கின்ற காரணத்தாலும், அந்த கல்லூரி தாளாளர் எனக்கு வேண்டப்பட்டவர் என்பதாலும்… பட்டமளிப்பு விழாவிற்கு என்னை நேரில் வந்து அழைத்திருந்தார். அப்போது, `உங்களுடைய பெயரை அழைப்பிதழில் போடவில்லை என தவறாக நினைக்க வேண்டாம்’ என்று கூறினார். அதற்கு நான், அதெல்லாம் ஒன்றுமில்லை. சரியாக தான் செய்துள்ளீர்கள், நான் கட்டாயம் வருகிறேன் என்று கூறி அனுப்பினேன்.
நிகழ்ச்சி, குறித்த நேரத்தைவிட 10 நிமிடங்கள் முன்னதாக துவங்கப்பட்டிருந்தது. நான் அங்கு செல்லும்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பேசுவதற்கு துவங்கினார். மேடையில் கலந்துகொள்ள கூடாது என எனக்கு தெரியும். அதனால் மாணவர்கள், பெற்றோர்கள் அமர்ந்திருந்த பகுதியில் அமரலாம் என்று சென்றேன். அப்போது, வி.ஐ.பி-க்கள் அமரும் இருக்கை கொண்டுவரப்பட்டது. தனியாக என்னை பிரிக்க வேண்டாம் என்று நானே கூறிவிட்டுதான் மக்களோடு அமர்ந்து கொண்டேன். உயர்கல்வித்துறை அமைச்சரும் மேடையில் பேசும்போது, `வாழ்த்துரை பகுதியிலாவது அமைச்சர் பெயரை போட்டிருக்கலாமே. இனி வரும் காலத்தில் செய்திடுங்கள்’ என்று கூறிவிட்டு சென்றார்கள்.
நாங்கள் எல்லாம் ஒரே கழகத்தில் பயணிப்பவர்கள். நாங்கள் தோழர்களை போன்றவர்கள். இதை எதையுமே நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மக்களின் பார்வைக்கு வேண்டுமானால், நான் அழைக்கப்படாமல் சென்றதாக தெரிந்திருக்கலாம். அது இயல்பானது தானே! என்னை முறையாக அழைத்ததன் பேரிலும், என்னுடைய பகுதியில் உள்ள ‘தமிழ் கல்லூரி’ என்பதாலும் அந்த பெருந்தன்மையோடுதான் கலந்துகொண்டு மாணவர்களைச் சந்தித்து வாழ்த்தினேன். எனக்கு அதில் எவ்வித மன வருத்தமும் கிடையாது, மகிழ்ச்சி தான்” என்றார்.