பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் இந்திய வம்சாவளியினர் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால், அவரது குடும்பம் வேறொரு நாட்டிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு ஓடிவந்தது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆம், குஜராத்தி இந்தியர்களாகிய பிரீத்தியின் பெற்றோர் உகாண்டா நாட்டில் வாழ்ந்துவந்தார்கள்.
உகாண்டாவின் அதிபரான இடி அமீன் (மனித மாமிசம் உண்டவர் என்று அழைக்கப்படும் இடி அமீன், மனித மாமிசம் நன்றாக இருக்கிறது, ஆனால், கொஞ்சம் உப்புக் கரிக்கிறது என்று கூறியதாக ஒரு தகவல் உண்டு), ஆசியர்களை நாட்டை விட்டுத் துரத்திய காலகட்டத்திற்கு சற்று முன், 1960களில் பிரித்தானியாவுக்கு ஓடிவந்தது பிரீத்தியின் குடும்பம்.
இந்த தகவலை பிரீத்தியே சொல்லியிருக்கிறார்…
அத்துடன், தான் எடுக்கும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நடவடிக்கைகள் தன் பெற்றோர் பிரித்தானியாவுக்கு வந்த காலகட்டத்தில் இருந்திருக்குமானால், அவர்கள் பிரித்தானியாவுக்கு வந்திருக்கவே முடியாது என்றும் பிரீத்தி கூறியுள்ளார்.
அவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை புலம்பெயர்ந்தோருக்கு எதிராக எடுத்ததால் அவரது கட்சியினரின் பாராட்டையும் ஆதரவையும் பெற்ற பிரீத்தி, தற்போது சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டம் திணறுவதால் அவரது கட்சியினரே அவரை தனிமைப்படுத்தும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
அத்துடன், உக்ரைன் அகதிகள் விடயத்தில் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், அவரை ஒதுக்கிவிட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அகதிகளுக்கென புதிதாக ஒரு அமைச்சரை உருவாக்கிவிட்டது, பிரீத்திக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
இருந்தாலும், பிரதமர் இல்ல மதுபான பார்ட்டிகள் பிரச்சினையில் முழுமையாக பிரீத்தி பிரதமர் ஜான்சனுக்கு ஆதரவாக நின்றுள்ளார்.
அடுத்து வரும் சில மாதங்கள் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமருக்கு அவர் உண்மையாக இருந்ததாலாவது அவரது பதவி காப்பாற்றப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.