வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை காரணமாக மோர்தானா அணை நிரம்பியது. அதேபோல, திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் அருவி நீரில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கத்திரி வெயில் முடிந்தும் வெயில் அதிகமாக கொளுத்தி வந்தது. தினமும் 100 டிகிரியை கடந்து வெயில் வாட்டி வதைத்தது. வேலூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மட்டும் பரவலாக மழை பெய்தது. நேற்றிரவு (புதன்கிழமை) மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் வேமாக நிரம்பி வருகின்றன. குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை கனமழை காரணமாக மீண்டும் நிரம்பியது. அணை நிரம்பியதை தொடர்ந்து, அணையில் இருந்து 88 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கவுண்டன்யா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மோர்தானா அணை மீண்டும் நிரம்பியதால் குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை (புதன்கிழமை) வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. வேலூர் மாநகர பகுதியில் நேற்றிரவு இடி மின்னலுடன் மழை ஒரு சில இடங்களில் கொட்டியது. காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் பகுதிகளில் கனமழை பெய்தது. வேலூர் மாநகரில் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் குட்டைப்போல் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் நடந்து செல்ல அவதிப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம், ஆற்காடு, வாலாஜா, கலவை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கலவை, ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்ததால் ஆங்காங்கே மழை வெள்ளம் சூழ்ந்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 89 மி.மீ.,கலவையில் 82.4 மி.மீ., மழையளவு பதிவானது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. இரவு 7 மணிக்கு மேல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் கடந்த 2 நாட்களாக ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரால் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா தலைமையில் வனச்சரக அலுவலர் பிரபு மற்றும் வனத்துறையினர் இன்று (வியாழன்கிழமை) அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க, மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவி அருகே செல்லவும், அருவியல் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் வருமாறு: திருப்பத்தூர் 15.7 மி.மீ., ஆம்பூர் 7.4 மி.மீ., நாட்றம்பள்ளி 7.2 மி.மீ., ஜோலார்பேட்டை 6 மி.மீ., வாலாஜா 45 மி.மீ., ஆற்காடு 56.2 மி.மீ., காவேரிபாக்கம் 89 மி.மீ., அம்மூர் 38 மி.மீ., கலவை 82.4 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.