பத்தாம் வகுப்பில் வாங்குகிற மதிப்பெண் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதில்லை. நீங்கள் பார்டரில் பாஸாகி இருந்தாலும், அதன் பிறகு உங்களால் முயன்று படித்து முதல் நிலை அடைய முடியும். இதற்கு உதாரணம் குஜராத்தின் Bharuch மாவட்ட கலெக்டர் துஷார் சுமேரா. மூன்று நாட்களாக ட்விட்டரில் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
கலெக்டர் துஷார் சுமேராவின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சக ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவனிஷ் சரண் பகிர்ந்திருக்கிறார். அதில், “பாரூஜ் கலெக்டர் துஷார் சுமேரா தேர்ச்சி பெறுகிற அளவுக்கு மட்டும் தான் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் பெற்றுள்ளார். 100-க்கு ஆங்கில பாடத்தில் 35-ம் கணிதத்தில் 36 மட்டுமே பெற்றிருக்கிறார். ஊரில் மட்டுமல்ல பள்ளியிலும்கூட அவரால் எதையும் சாதிக்க முடியாது என சொல்லியிருக்கிறார்கள்” அதனை மீறி தனது திறமையை நிரூபித்து இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக உயர்ந்திருக்கும் துஷாரின் சாதனை உயர்வானது.
யார் இந்த துஷார் !
துஷார் சுமேரா அஹமதாபாத்தைச் சேர்ந்தவர். 2012 சிவில் தேர்வுகளில் வெற்றி பெற்றார். அரசு பள்ளியில் தான் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். தற்போது பாரூஜ் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறார். UPSC தேர்வுகளுக்கு முன்பு அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக 2004-2007 வரை பணியாற்றியுள்ளார். 14 வருடங்களுக்கு பிறகு, தான் பணியாற்றிய பள்ளிக்கு சென்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
வைரல் பதிவு
அவரது மார்க் சீட்டை 2009 பேட்ச் அதிகாரி சரண் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் துஷார். மதிப்பெண்கள் வாழ்வை தீர்மானிப்பதில்லை என்பதற்கு இது மற்றொமொரு உதாரணம். இந்தப் பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் பாஸிட்டிவாக கமென்ட் செய்து வருகிறார்கள்.