`18 வயதைக் கடந்த சிலர் காதல் திருமணம் செய்வதும், குழந்தைத் திருமணம் என்றுதான் கருதப்படும். அதைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் நிலைமை மாறும்; காதல் திருமண எண்ணிக்கை குறையும்’ என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
`18 வயதைக் கடந்தவர் காதல் திருமணம் செய்வதை எப்படி குழந்தைத் திருமணம் என்று சொல்ல முடியும். அதையும், ஒரு சமூக நலத்துறை அமைச்சர் சொல்வாரா?’ என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து அமைச்சரிடம் பேசினோம்.
இது குறித்து அமைச்சர் கீதா கீவன் கூறுகையில், “கொரோனா பொதுமுடக்கத்தின்போது பள்ளிகள் மூடப்பட்டு, கல்வி தடைப்பட்டு, குழந்தைத் திருமணங்கள் அதிகரித்தன. இது தொடர்பான கேள்விக்கு, நான் பதிலளித்தபோது பேசியது அது. ஆனால், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை; அந்த வரிகளையும் சொல்லவில்லை. 18 வயது முடியும் வரை, பெண்களை குழந்தைகளாகத்தான் சட்டம் பார்க்கிறது. 18 வயது ஆரம்பித்துவிட்டாலே, `அதுதான் பதினெட்டு வயசு தொடங்கிடுச்சே… கல்யாணம் பண்ணிடுவோம்’ என்று பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் அது குழந்தைத் திருமணம்தான்.
கல்லூரியில் படிக்கும்போது காதல் வசப்படும் பெண்கள், `18 வயது முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு. கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்று முடிவெடுத்து செய்து கொண்டால் அதுவும் குழந்தைத் திருமணத்தின் கீழ்தான் வரும். 18 வயது முழுமையாக முடிந்த பிறகே, ஒரு பெண் சட்டப்படி திருமண வயதுக்குள் அடியெடுத்து வைக்கிறார். இந்த வயது தொடர்பான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது” என்றார்.