புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விவகார வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3-வது நாட்கள் விசாரணை நடத்தியுள்ளனர். நேற்று 3-ம் நாளாக அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காலை 11.35 மணியளவில் வந்த ராகுலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து நடைபெற்ற விசாரணை இரவு வரை நீடித்தது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கடந்த மூன்று நாட்களாக காங்கிரஸ் எம்.பி.க்கள், கட்சித் தொண்டர்கள் மீது காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி.க்கள் போராட்டம்: ராகுலிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், தொண்டர்கள் டெல்லியில கடந்த 3 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், கே.சி.வேணுகோபால், சச்சின் பைலட் உள்ளிட்ட தலைவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு இருந்த போலீஸாரின் தடுப்புகளை சில தொண்டர்கள் உடைத்தனர். மேலும் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டது. அது கொழுந்து விட்டு எரிந்ததால் கரும்புகை எழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்ற போது மோதல் ஏற்பட்டது. அப்போது போலீஸாரை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இதனிடையே இதுவரை 800 காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், தொண்டர்களை போலீஸார் சிறைபிடித்து வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடையை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறைபிடித்தோம் என்று சிறப்பு போலீஸ் கமிஷனர் (சட்டம்,ஒழுங்கு மண்டலம்-2) சாகர் பிரீத் ஹூடா தெரிவித்தார்.
இந்நிலையில், காவல்துறை அடக்குமுறை குறித்து ஆலோசிக்கவிருப்பதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.