Doctor Vikatan: நான் 6 மாத கர்ப்பிணி. இன்றைய சூழலில் பல குழந்தைகளுக்கு, பிறக்கும்போதே மஞ்சள் காமாலை வருவதைக் கேள்விப்படுகிறோம். எல்லாக் குழந்தைகளுக்கும் பிறக்கும்போது மஞ்சள் காமாலை வருமா? அதற்கு என்ன காரணம்?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி
பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ‘நியோநேட்டல் ஜாண்டிஸ்’ எனப்படும் மஞ்சள்காமாலை வரும் என்று சொல்வதற்கில்லை. நிறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளில், 60 சதவிகிதம் பேருக்கு வரலாம். அதேநேரம், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளில், 80 சதவிகிதம் பேருக்கு நியோநேட்டல் ஜாண்டிஸ் எனப்படும் இவ்வகை மஞ்சள் காமாலை வரலாம்.
நியோநேட்டல் ஜாண்டிஸ் என்பது, உடலில் ரத்தச் சிவப்பணுக்கள் உடையும்போது, பிலிருபின் எனப்படும் பொருள் உருவாகும். அதன் அளவு அதிகரிப்பதாலேயே, மஞ்சள்காமாலை வருகிறது. பிறந்த குழந்தைகளை பாதிக்கும்போது அதன் அளவீடைப் பொறுத்து சிகிச்சை அளிப்போம்.
அதாவது, பிறந்ததில் இருந்து 24 மணி நேரத்துக்குள் 5 மி.கிராமுக்கு மேல் இருந்தாலோ, 48 மணி நேரத்தில் 15 மி.கிராமுக்கு மேல் இருந்தாலோ, 72 மணி நேரத்தில் 18 மி.கிராமுக்கு மேல் இருந்தாலோ, போட்டோதெரபி என்ற சிகிச்சை கொடுக்கப்படும். முதல் நாளே 10 மி.கிராமுக்கு மேல் போனால், ‘எக்ஸ்சேஞ் டிரான்ஸ்மிஷன்’ என்ற சிகிச்சை அளிக்கப்படும்.
நியோநேட்டல் ஜாண்டிஸில் ‘பிரெஸ்ட் மில்க் ஜாண்டிஸ்’ என்று ஒன்று உண்டு. அதாவது தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வருகிற மஞ்சள் காமாலை இது. புட்டிப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு வராது. இதில், பிலிருபின் அளவு மோசமாகவெல்லாம் உயராது. மிதமான அளவில் கூடி, தானாகவே சரியாகிவிடும்.
அம்மாவுக்கு நெகட்டிவ் ரத்தப் பிரிவும், குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தப் பிரிவும் இருக்கும் ‘ஆர்.ஹெச் இன்கம்பாட்டிபிளிட்டி’ நிலைதான், இதற்கான காரணம். அம்மாவின் ரத்தப் பிரிவைப் பரிசோதித்து, குழந்தை வயிற்றில் இருக்கும்போதே முன்னெச்சரிக்கையாக ஊசிகள் செலுத்தப்படும். அப்படிக் கொடுக்காதபட்சத்தில், பிறக்கும் குழந்தைகளுக்கு பிலிருபின் அளவு மிக மோசமாகக்கூட வாய்ப்புண்டு.
சில குழந்தைகளுக்கு பிறந்து 3 முதல் 4 வாரங்களுக்கு, லேசான மஞ்சள் காமாலை இருக்க வாய்ப்புண்டு. இது ‘பிரெஸ்ட் ஃபீடிங் ஜாண்டிஸ்’ வகையைச் சேர்ந்தது. தானாகச் சரியாகிவிடும். பிறந்த குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை, பெரியவர்களுக்கு வரும் மஞ்சள் காமாலையைப் போல மிக மோசமானதல்ல. எனவே அது குறித்து பெரிதாக பயப்படத் தேவையில்லை.