நேற்றைய முன்தின இரவு. நாட்டிங்காம் மைதானம். அரங்கம் சூழ்ந்த ரசிகர் கூட்டம் ஆர்ப்பரிக்க ஓர் அசாத்திய டெஸ்ட் சேஸை நிகழ்த்தியிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. அன்று மாலைதான் இந்தியாவில் ஐ.பி.எல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் ஓர் பெருந்தொகைக்கு விற்கப்பட்டது. கிரிக்கெட் உலகின் இந்த இரு வேறு முக்கிய சம்பவங்களும் ஒரே தினத்தில் நடந்தேறியிக்கின்றன.
`இது அடுத்த கட்டத்திற்கான பாய்ச்சல், இந்த ரேஸில் நமக்கு முன்னிருப்பது NFL மட்டுமே’ என ஐ.பி.எல் குறித்தான பெருமிதங்கள் இணையமெங்கும் வழிந்தோடிக்கொண்டிருக்க வியாபார விரிவாக்கத்தை தாண்டி இந்நிகழ்வு போற்றப்படுவதற்கான காரணம் ஏதும் தெளிவாக புலப்படவில்லை.
கிரிக்கெட் எனும் விளையாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க, அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க இந்த மாற்றங்கள் அவசியம்தானே என கேள்விகள் பலவும் இதற்கான வாதங்களாய் எழலாம். சரிதான், ஆனால் கிரிக்கெட்டின் ஆன்மாவாக கருதப்படும் டெஸ்ட் ஃபார்மர்ட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் இவ்விளையாட்டை சார்ந்திருப்போர்களின் தலையாய கடமையே. “ இந்த டி20 யுகத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டையெல்லாம் யார் பார்ப்பது ” என்ற வாதம்கூட இடையில் எழுந்தது. இதற்கு நேர் எதிராய் டெஸ்ட் கிரிக்கெட் தன்னை தானே உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு மற்ற இரு ஃபார்மர்ட்டுகளைப்போல அத்தனை பெரிய வியாபார விரிவாக்கங்கள் அவசியப்படவும் இல்லை. `தனக்கு தேவையானவற்றைத் தானே நிகழ்த்திக்கொள்ளும் இந்த பிரபஞ்சம்’ என்று கூறுவார்களே அதைப்போல. சமீப ஆண்டுகளில் நடந்த பல போட்டிகளையும் இதற்கான சாட்சிகளென உறுதியாய்க் கூறிவிடலாம்.
தன் திறமையின் மீதான முழு நம்பிக்கை, எதிராளியை மதித்து அவரின் பலத்தை அறியும் நேர்த்தி, அதை வீழ்த்த தீட்டப்படும் வியூகம் ஆகியற்றோடு இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் வெற்றிக்கான போராட்ட குணம். எந்த ஒரு விளையாட்டு வீரருக்குமான பொதுவான தன்மைகளாக அம்சங்களாக இவற்றை கூறலாம். ஆனால் இந்த தன்மைகளும் அம்சங்களும் ஒவ்வொரு விளையாட்டிற்கும் மாறுபடும். அதில் கிரிக்கெட்டிற்கு தனித்தன்மையான இடமுண்டு.
ஏனென்றால் கிரிக்கெட்டைப்போல விதிமுறைகளைத் தாண்டி பிற காரணிகளால் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் விளையாட்டு மிக மிகக் குறைவு. ஆடுகளத்தின் தன்மை, காற்று வீசும் திசை அதன் ஈரப்பதம் ஏன் மைதானத்தில் அமைந்திருக்கும் ஒளிவிளக்குகளின் உயரம் வரை ஒவ்வொன்றும் தனிப்பட்ட வீரர் ஒருவருக்கு சவாலளித்துக் கொண்டேதான் இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது பல மடங்கு அதிகம். திறமைகளைத் தாண்டி இக்காரணிகளே தனியொரு வீரரை எடைபோடும் தராசு. முதல் நாளின் முதல் செஷன் தொடங்கி நாட்கள் செல்ல செல்ல ஆட்டத்தோடு ஒன்றிணைவது மட்டுமல்லாமல் இவை அனைத்திற்கேற்ப தானும் மாறிக்கொண்டு இருந்தால்தான் வெற்றி வசப்படும். அதனால்தான் 4 மணி நேரம் மட்டுமே ஆடப்படும் டி20 போட்டிகளோ 8 மணி நேரம் வரை செல்லும் ஒருநாள் போட்டிகளோ 5 நாட்களுக்கு விளையாடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு எந்த வகையிலும் ஈடாவதில்லை.
டெஸ்ட் கிரிக்கெட் கறாரானது. மற்ற இரு ஃபார்மர்ட்களில் வேண்டுமானால் வீரர்கள் தங்களுக்கிருக்கும் சிறு சிறு பலவீனங்களை மூடி மறைத்து தப்பித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் டெஸ்ட் களம் உங்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாது. இங்கு உங்கள் பலவீனங்கள் எப்படியும் அகப்பட்டுவிடும். சரிசெய்யாவிடில், அதுவே கரியரின் முடிவாகவும் அமையக்கூடும். இத்தனை கடினமான டெஸ்ட் களத்தை பின் எப்படி சமாளித்துக் கடப்பது.
பொறுமை, போராட்ட குணம் என்று இதற்கான குணங்களை, வழிகளை பட்டியலிட்டு கொண்டு போனாலும் இவை அனைத்தும்விட சிம்பிளாக ஒன்றை சொல்லவேண்டுமென்றால் ‘Stick with your basics’. ஆனால் சிம்பிளான இந்த ஒன்றுதான் இருப்பதிலேயே கடினமானது. இதைத் தொடர்ந்து கைக்குள் வைத்திருப்பவர்கள் மகத்தான ஆட்டக்காரர்கள் ஆகிறார்கள். அவர்களால் மாபெரும் போராட்டங்கள் கரைசேருகின்றன. டிராவிட்டும் லக்ஷ்மனும் சேர்ந்து ஃபாலோ-ஆனில் நின்ற அந்த ஒற்றை நாள், காயப்பட்ட அஷ்வினும் விஹாரியும் நின்ற அந்த நாற்பதுக்கும் மேலான ஓவர்கள், ஆஷஸை உயிர்ப்படைய வைத்த ஹெடிங்லியில் நிகழ்ந்த பென் ஸ்டோக்ஸின் அசாத்தியம் என நீளும் இப்பட்டியலின் சமீபத்திய வரவுதான் நியூசிலாந்திற்கு எதிரான இந்த இங்கிலாந்தின் வெற்றி.
சென்ற ஆண்டு இதே அணிக்கு எதிராக 273 ரன்களை சேஸ் செய்த இங்கிலாந்து அணி ட்ரா போதும் என 170 ரன்களோடு முடிந்துகொண்டது. ஆனால் இம்முறை 299 என்னும் டார்கெட்டை வெறும் ஐம்பதே ஓவர்களில் சேஸ் செய்து சாதித்திருக்கிறது அந்த அணி. உபயம்: பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்ஸ். இவ்வெற்றியை நிச்சயம் உச்சி முகர கண்டு கொண்டிருந்திருப்பாள் கிரிக்கெட் தாய். காரணம்….
இது போன்ற வெற்றிகள் வெறும் அணிகளுக்கானவை அல்ல, ஒட்டுமொத்த விளையாட்டிற்குமான வெற்றி இது! டெஸ்ட் கிரிக்கெட் ..நீ எக்காலத்திற்கும் உயிர்த்து இரு !