மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு ராணுவ ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், ஒடிசாவில் ராணுவத்துக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோவின் டெண்டேய் கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்சய் மொஹந்தி. இந்திய ராணுவத்தில் சேர்வதைக் கனவாகக்கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்த நிலையில், அவர் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவரின் மரணம் தொடர்பாக அவரது நண்பர் பிதாபஸ் ராஜ், “தனஞ்சய் எனது நெருங்கிய நண்பர். கடந்த நான்கு ஆண்டுகளாக நானும் அவரும் ராணுவத்தில் சேர தயாராகி வந்தோம். எனது நண்பர் தனஞ்சய் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு உடல் தகுதித் தேர்வை முடித்தார். எழுத்துத் தேர்வும் விரைவில் நடைபெறும் என ராணுவத்திடமிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கோவிட்-19 காரணமாக எழுத்துத் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் முயற்சிக்கலாம் என நினைக்கும் போது அக்னிபத் திட்டத்தின் காரணமாகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பையும் கடந்துவிட்டோம். அதனால், அந்த வாய்ப்பும் கைநழுவி விட்டது. வாட்ஸ்அப் குழுக்கள் மூலம், உ.பி., பீகார் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த பல இளைஞர்கள் இந்த திட்டத்தால் தற்கொலை செய்துகொண்டதை தனஞ்சய் அறிந்தார். இதையெல்லாம் பார்த்து மனம் தளர்ந்து போன அவர், நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துக்கொள்ளும் முன், எங்களுக்கு இறுதியாக ‘இந்த அரசை நம்பாதீர்கள், அவர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்காதீர்கள்’ எனச் செய்தி அனுப்பியிருந்தார்” என ஊடகங்களிடம் கூறியதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாலசேர் காவல்துறையினர், “என்ன காரணத்துக்காக தனஞ்சய் தற்கொலை செய்துகொண்டார் என தெரியவில்லை. விசாரணைக்குப் பின்பே கூறமுடியும்” எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து வயதான தனஞ்சய் பெற்றோர்கள் தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். ஆனால் சோரா மருத்துவமனையில் அதற்கான வசதி இல்லாததால் அவர்களின் மகனின் உறுப்புகளைக்கூட அவர்களால் தானம் செய்ய முடியவில்லை.