‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முப்படைகளில் குறுகிய காலம் ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் புதிய திட்டமான ‘அக்னிபத்’ எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள இந்த திட்டத்துக்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள், ரயில் தீ வைப்பு, வன்முறை சம்பவங்கள் ஆகியவரை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரயில் எரிப்பு சம்பவங்கள் அதிகரித்து நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்கிறது. இந்தச் சூழலில் இப்போது இந்தப் போராட்டம் மெல்லத் தென் மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. தெலங்கானாவில் பல இடங்களில் போராட்டம் தொடங்கி உள்ளது. செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி, ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அமைதியாகத் தொடங்கிய போராட்டம் ஒரு கட்டத்தில் கையை மீறிச் சென்றது. அங்கு இருந்த நான்கு ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்த அவர்கள், சரக்கு ரயில்களையும் மறித்தனர்.
போராட்டக்காரர்கள் செகந்திராபாத் ரயில் நிலைய அலுவலகங்களையும் சேதப்படுத்தினர். மேலும், அஜந்தா எக்ஸ்பிரஸ், ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் எம்எம்டிஎஸ் ரயிலுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். நிலைமையைக் கட்டுப்படுத்த அங்குக் கூடியிருந்த போராட்டக்காரர்களை நோக்கி தெலுங்கானா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் காயமடைந்தவர்கள் அருகே இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து நடைபெறும் ரயில் பெட்டி எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹரியானாவில் சட்டம் ஒழுங்கு நிலமையை கருத்தில்கொண்டு, செல்ஃபோன் இணைய சேவைகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை அம்மாநில அரசு 24 மணிநேரத்திற்கு தடை செய்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM