அக்னிபாத் போராட்டங்கள்: என்.டி.ஏ ஆளும் உ.பி., பீகார் மாநிலங்களில் கடும் நெருக்கடி

அக்னிபாத் ராணுவத்தில் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், செகந்திராபாத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் போராட்டங்கள் கடும் வன்முறையாக இருந்தது. அங்கே போராட்டக்காரர்கள் ரயில், பேருந்துகள் மற்றும் போலீஸ் தடுப்புகளுக்கு தீ வைத்தனர். மேலும், என்.டி.ஏ ஆளும் பீகாரிலும் தீ வைத்தனர். பீகாரில் மாநில பாஜக தலைவர் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் மற்றும் துணை முதல்வர் ரேணு தேவியின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டன. குறைந்தது 14 ரயில்களின் பல பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் போராட்டங்கள் பதிவாகியுள்ளன.

தெலங்கானாவில், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர். உயிரிழந்த இளைஞர் வாரங்கல்லைச் சேர்ந்த தாமோதர் ராகேஷ் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜூன் 17, 2022 வெள்ளிக்கிழமை, பாட்னாவுக்கு அருகிலுள்ள டானாபூர் ரயில் நிலையத்திற்கு வெளியே ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், டானாபூர் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் சொத்துக்களை சேதப்படுத்தினர். (புகைப்படம் – பிடிஐ)

“போராட்டத்தில் ஈடுபட்ட இந்த இளைஞர்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, அதில் அவர்கள் எல்லாவற்றையும் திட்டமிட்டனர். நேற்றிரவு ரயில் நிலையம் அருகே திரண்ட அவர்கள், இன்று காலை தாக்குதல் நடத்தினர். ஸ்டேஷனில் சுமார் 50 பாதுகாப்புப் பணியாளர்கள் இருந்தோம். ஆனால், ஸ்டேஷனுக்கான ஏழு நுழைவாயில்கள் வழியாக உள்ளே வந்த 500-1,000 பெரிய கும்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் வெறித்தனமாகச் சென்று, கண்ணில் பட்ட அனைத்தையும் அழித்து, பொதுச் சொத்துக்களுக்கு தீ வைத்தனர்” என்று கூடுதல் காவல்துறை இயக்குநர் (ரயில்வே, தெலங்கானா) சந்தீப் சாண்டில்யா கூறினார்.

மூன்று ரயில்களின் பல பெட்டிகள், இரண்டு பிரேக் வேன்கள் மற்றும் ஒரு விபத்து நிவாரண ரயிலின் பல பெட்டிகளை அந்தக் கும்பல் தீ வைத்து எரித்ததாக அவர் கூறினார். தெற்கு மத்திய ரயில்வேயின் மையமான ரூட் ரிலே இன்டர்லாக்கிங் சிஸ்டத்தை குறிவைக்க கும்பல் முயன்றது. ஆனால் பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களை விரட்டியடித்தனர் என்று கூறினார்.

மேலும், அவர் போராட்டக்காரர்கள் 3,000 லிட்டர் டீசல் இருந்த என்ஜினையும் எரித்தனர் என்று கூறினார். “டீசல் தீப்பிடித்தால் ஏற்படும் ஆபத்து பற்றி கூறப்பட்ட பிறகும் அவர்கள் தீயணைப்பு வீரர்களை தீயை அணைக்க அனுமதிக்கவில்லை… எரியும் என்ஜினை பிரித்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்தோம். ஆனால், அவர்கள் அதன் முன் அமர்ந்தனர்… நாங்கள் இந்த வெறியாட்டக் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினோம். அதில் ஒருவர் இறந்தார், மேலும் 10-15 பேர் காயமடைந்தனர்” என்று அவர் கூறினார்.

ஜூன் 16, 2022, வியாழக்கிழமை பீகாரின் கைமூர் மாவட்டத்தில் உள்ள பாபுவா ரயில் நிலையத்தில், ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ரயிலை சேதப்படுத்தினர். (புகைப்படம் பிடிஐ)

தெற்கு மத்திய ரயில்வே பொது மேலாளர் அருண் குமார் கூறுகையில், சேதத்தை இன்னும் மதிப்பிடவில்லை, ஆனால் அதிகாரிகள் 30-40 கோடி ரூபாய் இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். தெற்கு மத்திய ரயில்வே, இந்த ரயில் நிலையத்தை மூடியது. 71 ரயில்களை ரத்து செய்தது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பல்லியா மாவட்டத்தில் காலியாக இருந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. “ரயில் நிலையம் மற்றும் மைதானத்தில் சில மாணவர்கள் கூடியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களுடன் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் போது, அவர்கள் காலியான ரயிலின் கண்ணாடிகளை உடைத்து, தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு தீ வைக்க முயன்றனர்” என்று பல்லியா காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ் கரண் நய்யார் கூறினார். மேலும், சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அங்கே இரண்டு மாநில பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். “இங்குள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் கூடுவார்கள் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தோம். மிகச் சிலரே அந்த இடத்தை அடைந்தனர்… சிலர் கலவரத்தில் ஈடுபட முயன்றனர்… சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்” என்று வாரணாசி போலீஸ் கமிஷனர் சதீஷ் கணேஷ் தெரிவித்தார்.

அலிகாரில், ஒரு போலீஸ் அவுட்போஸ்ட் மற்றும் வளாகத்திற்குள் இருந்த வாகனத்திற்கு தீவைக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலையை மறித்து, சில பேருந்துகளை அடித்து நொறுக்கி எரித்தனர். ஆக்ரா மற்றும் மதுராவில் கல் வீச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில், உ.பி., ஏடிஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறியதாவது: சில மாவட்டங்களில் சில சிறிய சம்பவங்கள் நடந்துள்ளன. பல்லியாவில், நின்று கொண்டிருந்த ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. அலிகாரின் தப்பல் நகரில் பஸ் டயருக்கு தீ வைக்கப்பட்டது… அதிகாரிகள் இளைஞர்களிடம் பேசி, புதிய திட்டம் அவர்களுக்கு சாதகமாக இருப்பதாக விளக்கி வருகின்றனர். மாவட்ட அதிகாரிகள், ஜில்லா சைனிக் கல்யாண் வாரியத்துடனும், கிராமத் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும் உரையாடலை ஏற்படுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பீகாரில் உள்ள 38 மாவட்டங்களில் குறைந்தது 15 மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் போலீசார் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பீகார் பாஜக தலைவர் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் மற்றும் துணை முதல்வர் ரேணு தேவியின் வீடுகள் பெட்டியாவில் குறிவைத்து தாக்கப்பட்டன. இந்த்ந தாக்குதலின் போது, வீட்டிற்குள் இருந்த டாக்டர் ஜெய்ஸ்வாலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது; ரேணுதேவி பாட்னாவில் இருந்தார். பாஜக எம்எல்ஏ வினய் பிஹாரியின் வாகனமும் தாக்கப்பட்டது. இரண்டாவது நாளாக, மாதேபுரா, லம்பேர்ட் சராய், பகாஹா (மேற்கு சம்பாரண்) மற்றும் சரண் உள்ளிட்ட மாநில பாஜக அலுவலகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.

சமஸ்திபூர், லக்கிசராய் மற்றும் டானாபூர் (பாட்னா) ஆகிய இடங்களில் 10 ரயில்களின் பல பெட்டிகளையும், இஸ்லாம்பூர் (நாளந்தா), குல்ஹாரியா (அரா), ஃபதுவா (பாட்னா) மற்றும் சுபால் ஆகிய இடங்களில் தலா ஒரு பெட்டியையும் போராட்டக்காரர்கள் எரித்தனர். அவுரங்காபாத்தில் நான்கு பள்ளி பேருந்துகள் உட்பட சுமார் 75 தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி சனிக்கிழமை பீகார் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. “சமூக விரோதிகளைத் தடுக்கவும் போராட்டக்காரர்களை அடையாளம் காணவும் முயற்சி செய்கிறோம்” என்று பீகார் கூடுதல் காவல்துறை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சஞ்சய் சிங் கூறினார். கடந்த இரண்டு நாட்களில், குறைந்தது 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால், பாகல்பூரில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

ஹரியானாவில், பல மாவட்டங்களில் தீ வைப்பு, கல் வீச்சு மற்றும் போராட்டங்கள் பற்றிய செய்திகளுக்கு மத்தியில், மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், “சம்பந்தப்பட்டவர்கள் தப்பிக்க முடியாது” என்று எச்சரித்தார். குர்கான், ஃபரிதாபாத், பல்வால், நர்நாவுண்ட் (ஹிசார்), நர்னோல், நர்வானா (ஜிந்த்) மற்றும் ரோஹ்தக் ஆகிய இடங்களில் போராட்டங்கள் பதிவாகியுள்ளன. பல்வால், பல்லப்கர் மற்றும் மகேந்திரகர் ஆகிய இடங்களில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

போராட்டக்காரர்கள் ஜிந்த்-பதிண்டா ரயில் பாதையை மூன்று மணி நேரம் மறித்தனர். ரோஹ்தக்கில் சில இளைஞர்கள் டயர்களை எரித்தனர். மேலும் 40க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் வாகனங்கள் மீது கற்களை வீசியதற்காக அவர்கள் ஃபரிதாபாத்தின் பல்லப்கரில் சுற்றி வளைக்கப்பட்டனர்.

பல்வாலில் வியாழக்கிழமை நடந்த வன்முறைக்காக 1,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. “குறைந்தபட்சம் 80 பேர் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 950 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. வீடியோ கிளிப்பிங்குகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சரிபார்த்து அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அடையாளம் காணப்பட்ட அனைவரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில், இரண்டாவது நாளாக போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தியதால், பதான்கோட்-ஜம்மு மற்றும் ஜம்மு-பூஞ்ச் ​​நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.