அதிமுக-வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற கருத்து மோதலாக வெடித்து வருகிறது. இந்நிலையில், அதிமுக கோவை கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த ஆட்சியில் வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது,
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் நடத்துங்கள் என்று பலமுறை வலியுறுத்தினார். ஆனால், வழக்கை காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் இருந்தனர். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் திமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்தியுள்ளது.
அதில் பெரும்பாலான அதிமுக-வினர் தோல்வியை சந்தித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே தேர்தல் நடத்தியிருந்தால் வெற்றியை பெற்றிருப்போம். கட்சி இன்று நல்ல நிலையில் இருந்திருக்கும். தற்போது கட்சி இரண்டு கோஷ்டியாக பிரிந்து, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தனித்தனியாக பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏதோ விபத்தில் இந்த இருவரும் வந்துவிட்டனர். அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா. கட்சி தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் சண்டைக் கட்டுவது சரியாக இருக்காது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முடிவை எல்லாம் ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டா செய்தார்கள். ஓ.பி.எஸ், இ.பி.எஸ், வேலுமணி போன்ற தலைவர்களின் சொந்த வார்டுகளிலேயே அதிமுக வெற்றி பெற முடிவில்லை. அதிமுக பெரிய இயக்கம். அதைத் சாதிக்கட்சியாக மாற்றி வருகின்றனர்.
தொண்டர்கள் நொந்து நூல் ஆகியுள்ளனர். கட்சியை நல்ல நிலையில் கொண்டு செல்வார்கள் என்றுதான் நாங்கள் ஒதுங்கியிருக்கிறோம். கட்சிக்காரர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். முடிந்தால் நீங்கள் இருவரும் ஒதுங்கக் கொள்ளுங்கள்.
பல சிறந்தத் தலைவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் பொதுச்செயலாளராக வந்து கட்சியை பார்த்துக் கொள்வார்கள். இந்த இயக்கம் இதுபோல பலமுறை உடைந்து மீண்டு வந்துள்ளது. தற்போது அதற்கான சூழல் இல்லை. இவர்கள் இருவரும் நன்றியை மறந்துவிட்டனர்.
இருவரும் ஆளுக்கு 50 பேரை வைத்து கோஷ்டி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். மாறி மாறி போஸ்டர் ஒட்டிக் கொள்கின்றனர். இனியும் இவர்களால் கட்சியை சிறப்பாக நடத்த முடியாது.
அன்வர் ராஜாவை எல்லாம் கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது. நான் பேசுவதும் அவர்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும். என்னையும் நீக்கிக் கொள்ளுங்கள். நான் யாரையும் சார்ந்து பேச மாட்டேன். சசிகலா தான் எடப்பாடியை முதல்வராக்கினார்.
அந்த நன்றியை மறந்து அவரையே மோசமாக பேசுகின்றனர். உண்மையில் அதிமுகவில் இருவருக்கும் ஆதரவில்லை. நீங்கள் இருவரும் வேண்டாம். இது தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா வளர்த்த கட்சி. அதிமுகவை சாதிக்கட்சியாக மாற்றிவிடாதீர்கள்” என்றார்.