புதுடெல்லி: வாக்காளர் பட்டியலை ஆதாருடன் இணைப்பது, 18 வ யது நிரம்பியவர்கள் ஆண்டுக்கு 4 முறை வாக்காளராக பதிவு செய்ய அனுமதித்தல் உட்பட 4 தேர்தல் சீர்த்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்வதற்காக, ‘தேர்தல் திருத்தச் சட்டம் – 2021’, கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் தேர்தல் நடைமுறையில் 4 முக்கிய நடைமுறைகளை சேர்ப்பதற்கான 4 அறிவிக்கைகளை ஒன்றிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரி ஜுஜு நேற்று வெளியிட்டார். இதன்படி அமலுக்கு வர உள்ள நான்கு முக்கிய அம்சங்களின் விவரம் வருமாறு:,1. ஒரே வாக்காளர் பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை தடுக்கும் வகையில், வாக்காளர் பட்டியல் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும், இதன்மூலம், கள்ள ஓட்டுகள் போடப்படுவது தடுக்கப்படும்.2. ராணுவம், அயல் நாட்டு பணி, தேர்தல் பணி போன்றவற்றில் உள்ள கணவன் அல்லது மனைவிக்கு பதிலாக இவர்களில் யாராவது ஒருவர் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் பாலின சமத்துவ தேர்தல் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன்படி, ‘மனைவி’ அல்லது ‘கணவன்’ என்ற வார்த்தை, ‘வாழ்க்கை துணை’ என்று பொது பாலினமாக மாற்றப்படும். 3. 18 வயது நிரம்பிய இளைஞர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் ஆண்டுக்கு 4 முறை வழங்கப்பட உள்ளது. தற்போது, ஜனவரி 1ம் தேதி படி 18 வயது நிரம்பியவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், ஜனவரி 1க்குப் பிறகு 18 வயதை எட்டும் இளைஞர்கள், ஓராண்டு காத்திருக்க வேண்டியுள்ளது. இனிமேல், ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என்ற அடிப்படையில், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க 4 முறை வாய்ப்புகள் வழங்கப்படும்.4. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பாதுகாப்பு படை வீரர்கள், தேர்தல் பணியாளர்களை தங்க வைப்பதற்கும், தேர்தல் சம்பந்தப்பட்ட பொருட்களை வைப்பதற்கும் தங்களுக்கு தேவைப்படும் எந்த ஒரு இடத்தையும் தேர்தல் ஆணையம் கேட்டு பெற முடியும்.