வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தர்மசாலா-”ஆசிரியர் பயிற்சியில் ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பம் பற்றிய பாடத்தையும் சேர்க்க வேண்டும்,” என பிரதமர் மோடி கூறினார். ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
மாபெரும் வெற்றி
இங்குள்ள தர்மசாலாவில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாடு, ௧௫ம் தேதி துவங்கியது. மாநாட்டின் இரண்டு மற்றும் மூன்றாவது நாளில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:மத்திய அரசு, ௨௦௧௮ல், நாடு முழுதும் சீரான வளர்ச்சி பெறும் நோக்கில், ‘வளர்ந்து வரும் மாவட்டங்கள்’ திட்டத்தை துவக்கியது. சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே, இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டம், நான்கு ஆண்டுகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்கள், தற்போது உத்வேகம் அளிக்கும் மாவட்டங்களாக மாறியுள்ளன.வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டத்தை, நகர மற்றும் வட்டார அளவில் கொண்டு செல்ல வேண்டும். வளர்ந்து வரும் மாவட்டங்களில், திறமையும், தகுதியும் உள்ள இளைஞர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். அவர்களால், தங்களின் சிந்தனை மற்றும் செயல் திட்டங்கள் வாயிலாக குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்த மாவட்டங்களில் பணியாற்றுவதன் வாயிலாக அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம், நாட்டுக்கு பெரும் பலன் அளிக்கும்.ஆசிரியர் பயிற்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பம், மொபைல் செயலிகள் பயன்பாடு ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும்.
விரிவான விவாதம்
ஆசிரியர் பயிற்சிக்கு என, தனி ‘டிவி’ சேனல் துவக்கப்பட வேண்டும். அத்துடன், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை, ஆசிரியர் பயிற்சியில் ஈடுபடுத்துவது நல்லது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.மாநாட்டில், தேசிய கல்விக் கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் விவசாய விளைபொருட்களில் தன்னிறைவு அடைதல் ஆகியவை குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.
Advertisement