புதுடில்லி-ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீதான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறையினர் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
வழக்கு பதிவு
இங்கு கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சத்யேந்தர் ஜெயின், 57. இவர் 2015 – 16ல் அரசு அதிகாரியாக பணியாற்றியபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2017ல் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 2018ல் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, சத்யேந்தர் ஜெயினின் குடும்பத்தினர் பெயரில் இருந்த 4.81 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத் துறை கடந்த ஏப்ரலில் பறிமுதல் செய்தது.இந்நிலையில், மே 30ல் சத்யேந்தர் ஜெயின் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ரூ.2.82 கோடி
கடந்த ௬ம் தேதி, புதுடில்லியில் உள்ள அவரது வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி, 2.82 கோடி ரூபாய் ரொக்கம், 133 தங்க நாணயங்கள் உட்பட 1.80 கிலோ தங்கம் ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கிடையே, சத்யேந்தர் ஜெயின் ‘ஜாமின்’ கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, டில்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்து உள்ளது. இந்நிலையில், சத்யேந்தர் ஜெயினின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறையினர் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர்.
Advertisement