வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐக்கிய நாடுகள்: பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி அப்துல் ரெஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா, அமெரிக்காவின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள்படி தான் செய்துள்ளதாக கூறி தனது நடவடிக்கையை சீனா நியாயப்படுத்தி உள்ளது.
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் அப்துல் ரெஹ்மான் மக்கி(74). பாகிஸ்தானில் உள்ள அவனை, பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அவனது சொத்துகளை முடக்கி வைத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து, ஐ.நா., சட்டங்களின்படி, அவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கையில் இறங்கின. ஆனால் பாகிஸ்தானின் கூட்டாளியான சீனா, வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது: பயங்கரவாதத்தை சீனா அனைத்து வகைகளிலும் எதிர்க்கிறது. ஐ.நா.,வில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளின்படி தான் எடுக்கப்பட்டுள்ளது. சீனா தனது பணியை ஆக்கப்பூர்வமான மற்றும் பொறுப்பான முறையில் மேற்கொள்ளும் என்றார்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், சீனாவின் முடிவு பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம் என்ற வாக்குறுதிக்கு எதிரானது. அந்நாட்டின் இரட்டை வேடத்தை எடுத்து காட்டுகிறது. அனைவராலும் நன்கு அறியப்பட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்பது என்பது, சீனா மீதான நம்பகத்தன்மையை குறைப்பதுடன், வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் உட்பட்டு கொள்கிறது. மக்கிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்தாலும் சீனாவின் நடவடிக்கை எதிர்பாராதது. பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம் என்ற கூற்றுக்கு எதிரானது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதிக்கு எதிரான நடவடிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை போடுவது இது முதல்முறை அல்ல. பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரையும் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு, தன்னிடம் உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடை விதித்தது. இதன் பின்னர், இந்தியா- சீனா இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தடையை விலக்கி கொண்டது. இதனையடுத்து மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement