கொல்கத்தா,
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்று இருந்தன. மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான 3-வது கட்ட தகுதி சுற்று போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதில் இந்திய அணி தங்கள் கடைசி போட்டியில் ஹாங்காங் அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் நடந்து முடிந்த தகுதி சுற்று போட்டியில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகித்த இளம் வீரர் சாஹல் அப்துல் சமத் (25 வயது) இந்திய கால்பந்து அணியின் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அப்துல் சமத் கூறியதாவது :
நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். இதனால் இனி வரப்போகும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் ஒரு பகுதியாக இருக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நாங்கள் போட்டிகளை அணுகும் விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த தொடரில் நாட்டுக்காக எனது முதல் கோலை அடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு குழு விளையாட்டு மற்றும் அதில் ஈடுபட்ட அனைவருக்கும் பெருமை சேரும்.
வீரர்களாக எங்கள் அனைவருக்கும் அதிக விளையாட்டு நேரம் தேவை. ஒரு தொடர் நீண்டதாக இருந்தால், ஒரு வீரர் மேலும் தனது ஆட்ட திறனில் முன்னேற்றம் காணலாம். அது உங்களை சிறந்த மனநிலையில் இருக்க செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.