இலங்கையின் அண்மைய நம்பிக்கை மீறல் காரணமாக, இலங்கைக்கு அடுத்த 500 மில்லியன் டொலர் எரிபொருள் கடன் வசதியை வழங்க இந்தியா தயங்குவதாக தகவல்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் எரிபொருள் விநியோகம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள நிலையில், கடன் சலுகை தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னதாக இந்தியா வழங்கிய எரிபொருள் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு நேற்றைய தினம் 40 ஆயிரிம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிக்கொண்டு இறுதி கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்றைய தினம் வந்தடைந்தது.
இந்நிலையில், எதிர்காலத்திற்கான எரிபொருள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் கடனுதவி வழங்குவது குறித்த நெருக்கடிக்கு முக்கிய காரணம் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியில் ஏற்பட்டுள்ள விரிசல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அழுத்தம் கொடுத்த இந்திய பிரதமர்
இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ மன்னார் அனல்மின் நிலையம் தொடர்பில் அண்மையில் கோப் குழுவில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அதானி குழுமத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்ததாக கோப் குழுவில் இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கை இரு நாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சில உள்ளூர் குழுக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான உணர்வை உருவாக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.