காஷ்மீர்: இளைஞர்கள் ஆயுதப்படையில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய அக்னி பாதை திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் வயது தளர்வு அறிவித்திருப்பது இளைஞர்கள் மீது அரசுக்கு உள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் வலுத்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
இரண்டு நாள் பயணமாக ஜம்மு – காஷ்மீர் சென்றுள்ள அவர், “கடந்த இரண்டு ஆண்டுகள், கொரோனா காரணமாக ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெறாததால், இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்புக் கிடைக்கவில்லை . இளைஞர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, 2022-ம் ஆண்டில் அக்னி பாதை திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை 21-லிருந்து 23-ஆக உயர்த்தி அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் வயது தளர்வு அறிவிப்பு இளைஞர்கள் நலன் மீதான அரசாங்கத்தின் அக்கறையை காட்டுகிறது. ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை ராணுவ விவகாரங்களுக்கான அமைச்சகம், ராணுவ மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் தொடங்கும். இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் அவர், பஹல்காமிலுள்ள ஜவஹர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மவுன்டெய்னரிங் மற்றும் விண்டர் ஸ்போர்ட்சின் 9-வது நிர்வாகக்குழு மற்றும் 4-வது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “மலையேறுதல் மற்றும் குளிர்கால விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஜவஹர் நிறுவனம் உள்ளது. மலையேறுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்கள் உடல் சகிப்புத் தன்மையை அதிகரிப்பதுடன், மனஉறுதியையும், உற்சாகத்தையும் தருகிறது.
ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த துறைகளில் தற்போது பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவது அதிகரித்து வருவது பாராட்டுக்குரியது” என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதனிடையே, அக்னி பாதை திட்டத்தை திரும்பபெறக் கோரி பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பிஹார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, தெலங்கானா என 7 மாநிலங்களிலும் போராட்டங்கள் பரவிவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான தொகையுடன் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னி பாதை திட்டம் கொண்டுவரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.