உலக நாடுகளில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவு விலைவாசி அதிகரித்து வருகிறது. மே மாதத்தில் அமெரிக்காவில் பணவீக்கம் 8.6% ஆக உள்ளது. நாட்டின் விலைவாசி அதிகரித்ததற்கு அதிபர் ஜோ பைடனும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்கா மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் விலைவாசி உயர்வு உச்சத்தைத் தொட்டுள்ளது. 2022 முதலாம் காலாண்டு நிலவரப்படி, துருக்கியில் பணவீக்கம் உலக நாடுகளிலேயே அதிக அளவில் உள்ளது. துருக்கியில் பணவீக்கம் 54.8% ஆக உள்ளது. விரைவில் இது 70% -ஐ நெருங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலுக்கு அடுத்து அர்ஜெண்டினாவில் பணவீக்கம் 60% நெருங்கப் போகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பணவீக்கம் மிக வேகமாக அதிகரித்து வரும் நாடுகளில் இஸ்ரேல் முதல் இடத்தில் உள்ளது. இஸ்ரேலில் பணவீக்கம் 4.1% ஆக உள்ளது. இஸ்ரேலுக்கு அடுத்து பணவீக்கம் அதிகரித்து நாடுகளில் இத்தாலி உள்ளது. இத்தாலியில் 2020 -ல் 0.29% ஆக இருந்த பணவீக்கம் 2022 -ல் 5.67% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2022 மே மாதத்தின்படி பணவீக்கம் 15.88 % உள்ளது.
Pew Research Center – இதழ் நடத்திய ஆய்வில், 44 நாடுகளில் 37 நாடுகளில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சராசரி வருடாந்திர பணவீக்க விகிதம் 2020 முதல் காலாண்டில் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது எனத் தெரிய வந்துள்ளது. இதற்கு கரோனா ஊரடங்கு, உக்ரைன் – ரஷ்யா போரே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கரோனா காலக்கட்டங்களில் வேலையிழப்பு பெரும் அளவு நிலவியது. மேலும் பொருட்கள் விநியோக சங்கலிகள் பாதிக்கப்பட்டதால் உலக அளவில் தேக்க நிலை நிலவியது. இந்த நிலையில் மெல்ல மெல்ல பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்ட சூழலில்தான் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூண்டது. இதையெடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வந்ததது. இதன் காரணமாகவே தொடர்ந்து உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. குறிப்பாக, லெபனான், துனிஷியா, லிபியா, எகிப்து ஆகிய நாடுகள் கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.