இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. விலைவாசி உயர்வு என்பது இலங்கை மக்கள் கனவிலும் எதிர்பார்க்காத வகையில் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதனால் இலங்கை மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர்.
அதன்படி இதுவரை சட்டவிரோதமாக கடல் வழியாக உயிரைப் பணயம்வைத்து படகுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 84 பேர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், இலங்கையிலிருந்து மக்கள் கடல் வழியாக தமிழ்நாடு செல்வதை தடுக்க இலங்கை கடலோர காவல்குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தது. அவ்வாறு கடல் வழியாக அண்டை நாட்டுக்கு செல்ல முயன்ற இலங்கை மக்களை நடுக்கடலில் மடக்கி இலங்கைக்கு திருப்பி அனுப்புகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை நான்காம் மணல் திட்டில், குழந்தைகளுடன் சிலர் சுற்றித் திரிவதாக மரைன் போலீஸாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி நான்காம் மணல் திட்டில் நான்கு குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட ஏழுபேரைப் பிடித்து மண்டபம் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ்நிவாஸ் (40), அவர் மனைவி ரஞ்சனி, இவர்கள் குழந்தைகள் யஷ்வா, ஏஞ்சல், அனுஷ்கா என்பதும், மற்ற இருவர் திரிகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மதியா (40) அவர் மகன் சாந்தனு என்பதும் தெரியவந்தது. “இலங்கையில் தொழிற்சாலைகள் முடப்பட்டதால் வேலை வாயப்பு இல்லை. எங்களிடம் உள்ள பணம் அங்கு ஒரு நாள் சாப்பாட்டுக்குக்கூட பத்தாது. அந்த அளவுக்கு விலை அதிகம். குழந்தைகள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேறு வழியின்றி அகதிகளாக நுழைந்திருக்கிறோம்” என போலீஸாரிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இதையடுத்து அவர்கள் குறித்த தகவல்களை இலங்கைக்கு தமிழ்நாடு போலீஸார் அனுப்பிவைத்திருக்கின்றனர். எந்தவித குற்றப்பிண்ணனி இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அவர்கள் முகாமில் தங்கவைக்கப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து அகதி மதியாவிடம் பேசினோம். “இலங்கையில் மக்கள்படும் துயரங்கள் வெளியில் தெரிவதில்லை. பசி, பட்டினியாகக் கிடக்கிறோம். உணவுக்கு கையேந்தினாலும் கொடுக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அங்குள்ள அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. போராட உடம்பில் தெம்பில்லை. தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்றுவிடலாம் என்று தோன்றியது.
கடலில் முழ்கி இறந்துவிடக்கூடும் என்ற அச்சத்தை உண்டாக்கினர். இங்கு பட்டினியாய் கிடந்து சாவதற்கு, கடலில் முழ்கி செத்தாலும் பரவாயில்லை என நகை, சொத்துகளை விற்று படகுக்கு ஒரு லட்சம் கொடுத்து இங்கு வந்து சேர்ந்துள்ளோம். எங்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு மட்டும் போடுங்கள், எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறோம். எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என கண்ணீர் மல்க கூறினார்.
தமிழ்நாடு நோக்கி இலங்கை மக்கள் மீண்டும் அகதிகளாக வரதொடங்கியிருப்பதால் தமிழ்நாடு கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.