என்.சி.சி., மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு| Dinamalar

புதுச்சேரி: பாய்மரப் படகில் கடலில் 302 கி.மீ., சாகசப் பயணம் மேற்கொண்ட என்.சி.சி., மாணவர்களுக்கு தேங்காய்திட்டு துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

என்.சி.சி., தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் இயக்ககத்தின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி என்.சி.சி., குழுமம் சார்பில், ஆண்டுதோறும் கடல்வழி சாகசப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு, ‘சமுத்திர கமன் – 2022’ என்ற பெயரில் புதுச்சேரியில் இருந்து பாய்மரப் படகில் காரைக்கால் சென்று, மீண்டும் புதுச்சேரி திரும்பும் வகையில், 302 கி.மீ., தொலைவு கடல்வழி சாகசப் பயணம் கடந்த 6ம் தேதி துவங்கியது.

கடலுார், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக கடந்த 10ம் தேதி காரைக்காலை அடைந்த என்.சி.சி., மாணவர்கள் அங்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.மறுநாள் 11ம் தேதி காரைக்காலில் இருந்து, அதே மார்க்கத்தில் புதுச்சேரிக்கு புறப்பட்டனர். இக்குழுவினர் நேற்று கனகசெட்டிக்குளம் எல்லையை அடைந்தனர். பின்னர் தேங்காய்திட்டு துறைமுகத்தில் காலை 11.00 மணியளவில் பயணத்தை நிறைவு செய்தனர்.

சாகசப்பயணத்தில் பங்கேற்ற என்.சி.சி.யின் 35 மாணவர்கள், 25 மாணவிகள் உள்ளிட்ட 60 பேருக்கு முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ., தட்சிணாமூர்த்தி, கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு, மீன் வளத் துறை இயக்குனர் பாலாஜி, என்.சி.சி., அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.