ஹைதராபாத்: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கப்பரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை கண்டித்து, ஹைதராபாத்தில் ராஜ்பவன் முற்றுகை போராட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியினர் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி தலைமையில் பேரணியாக நேற்று சென்றனர்.
ஹைதராபாத் கூட்டு ரோடு அருகே போலீஸார் இவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது முன்னாள் எம்பியான ரேணுகா சவுத்ரியை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற எஸ்.ஐ தேவேந்திரா என்பவர் முயற்சித்தார்.
அப்போது ரேணுகா சவுத்ரி அந்த எஸ்.ஐ.யின் சட்டை காலரை பிடித்து ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததற்காக, ரேணுகா சவுத்தரி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.