ஆம்ஸ்டெல்வீன்: நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 498 ரன் குவித்த இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்தது.
நெதர்லாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (1) ஏமாற்றினார். பின் இணைந்த பில் சால்ட், டேவிட் மலான் ஜோடி நெதர்லாந்து பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. இவர்கள் இருவரும் சதம் கடந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 222 ரன் சேர்த்த போது பில் சால்ட் (122) அவுட்டானார். அடுத்து வந்த ஜாஸ் பட்லர், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அபாரமாக ஆடிய பட்லர், 47 பந்தில் சதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 284 ரன் சேர்த்த போது மலான் (125) அவுட்டானார். கேப்டன் இயான் மார்கன் (0) ஏமாற்றினார்.
அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் அரைசதம் கடந்து கைகொடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 498 ரன் எடுத்தது. பட்லர் (162), லிவிங்ஸ்டன் (66) அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்து புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் 2018ல் நாட்டிங்காமில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன் எடுத்தது சாதனையாக இருந்தது.
Advertisement