காவல் ஆய்வாளர் ஒருவரை வெட்டி கொலை செய்வதற்காக காத்திருந்த ரவுடி ஒருவன், 2 அடி நீள கத்தியால் அவரை வெட்ட முயலும் போது சினிமா பாணியில் சிங்கம் போல பாய்ந்து பிடித்து காவல் ஆய்வாளர், ரவுடியை மடக்கிய பரபரப்பான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
கேரள மாநிலம் ஆலப்புழா, நூறநாடு பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணி செய்து வருபவர் அருண் குமார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அருண் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது போலீசாரால் தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேட்டு குற்றவாளியான சுகுதன் என்பவன் சாலையோரம் நிற்பதை கண்ட காவல் ஆய்வாளர் அருண்குமார் , தனது வாகனத்தை நிறுத்தி அதிரடியாக அவனை பிடிக்க முயன்றார்.
இதையடுத்து ஆவேசமான ரவுடி சுகுதன் தனது இரு சக்கரவாகனத்தில் வெள்ளைத்துணியில் சுற்றி மறைத்து வைத்திருந்த 2 அடி நீள பட்டாக்கத்தியால் அருண்குமாரை வெட்ட முயன்றான்
கண்ணிமைக்கும் நேரத்தில் ரவுடியின் கையை எட்டிப்பிடித்து மடக்கிய காவல் ஆய்வாளர் அருண்குமார் அவனுடன் மல்லுக்கட்டி அவன் கையில் இருந்த கத்தியை பறித்து காவலரிடம் கொடுத்தார். அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது
கையில் லேசான வெட்டுக்காயம் அடைந்தாலும் அஞ்சாத சிங்கம் போல அருண்குமார் செய்த வீரதீர செயலை கண்டு அங்கிருந்தவர்கள் வியப்படைந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த ஆவேசமடைந்த சமூக ஆர்வலர் ஒருவர் ரவுடி சுகுதனை நாலு மொத்து மொத்தினார்
கொலை செய்யும் திட்டத்துடன் தன்னை வெட்ட முயன்ற ரவுடியை , துப்பாக்கியால் சுட்டு பிடிக்க அதிகாரம் இருந்தும், வெறுங்கையுடன் தைரியமாக பாய்ந்து பிடித்து காவல் ஆய்வாளர் கைது செய்த தரமான சம்பவம் தொடர்பான இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பாரட்டுக்களுடன் வைரலாகி வருகிறது.