திருச்சி: கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதைத் தடுக்க எளிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என மூத்த பொறியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து பிரியும் கல்லணைக் கால்வாய் ஏறத்தாழ 148 கிலோ மீட்டர் நீளத்துக்கு முதன்மை வழித்தடமாகவும், 636 கிலோ மீட்டர் நீளத்துக்கு கிளை வாய்க்கால்களுடனும் புதுக்கோட்டை மாவட்டம் வரை செல்கிறது. இதன் மூலம் 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கல்லணைக் கால்வாயை புனரமைப்பு செய்ய ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் ரூ.2,639.15 கோடி மதிப்பீட்டில் கரைகள் மற்றும் படுகை பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
கால்வாய் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதால் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கான்கிரீட் தளத்தில் ஆங்காங்கே 2 அங்குலத்தில் பிளாஸ்டிக் குழாய்கள் அமைக்கப்படுவதால் நிலத்தடிக்குள் நீர் செல்லும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பராமரிக்கப்படும் என பொதுப் பணித் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
முழு கால்வாய்யையும் கான்கிரீட் தளமாக மாற்றும் திட்டத்தில் சில எளிய அடிப்படை தொழில்நுட்பங்களை மேற்கொண்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காமல், அதே நேரத்தில் கடைமடைக்கு தண்ணீர் வீணாகாமல் கொண்டு செல்லலாம் என மூத்த பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வீரப்பன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
நீர்பாசனத்தை திறம்பட செயல்படுத்த பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கல்லணைக் கால்வாய் முழுவதையும் கான்கிரீட் தளமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2 அங்குல குழாயால் பலனில்லை
இந்தப் பணியால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும், கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ளிட்டவை வறண்டுபோகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏனெனில் தமிழகத்தில் 40 சதவீத பாசனம் நிலத்தடி நீரைக் கொண்டு தான் மேற்கொள்ளப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க 2 அங்குலத்தில் குழாய் அமைப்பது போதிய பலனை தராது. இதற்கு மாற்றாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க எளிய தொழில்நுட்பங்களை கையாண்டால் போதுமானது. அது நல்ல பலனை தரும்.
மணல் வடிகட்டி
இதன்படி கால்வாயின் ஒவ்வொரு 100 மீட்டரிலும் 3 மீட்டர் அகலத்துக்கு மணல் வடிகட்டி (Sand Filter) அமைக்கலாம். ஒவ்வொரு மணல் வடிகட்டியிலும் மணல், சரளைக் கற்கள் மற்றும் ஜல்லிக் கற்கள் ஆகியவற்றை வரிசையாக அடுக்குகளாக அமைத்து, அதன் கீழே 2 அல்லது 3 உயர் அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக் குழாயில் (HDPE) ஓட்டைகள் போட்டு பொருத்தி விட்டால், எளிதாக நிலத்தடியில் தண்ணீர் சென்று நிலத்தடி நீர்மட்டம் பராமரிக்கப்படும்.
இது எளிதான தொழில்நுட்பம் தான் என்றாலும் இதனால் பலன்கள் அதிகம் கிடைக்கும்.
இந்த அமைப்பு அளிக்கும் பலனை உறுதிப்படுத்தவும், விவசாயிகள், பொதுமக்களின் சந்தேகத்தைப் போக்கவும், கால்வாயின் கரையிலிருந்து 15 முதல் 30 மீட்டர் தொலைவில் 6 முதல் 9 மீட்டர் ஆழத்துக்கு சிமென்ட் கான்கிரீட் உறைகளைக் கொண்டு திறந்தவெளி கிணறு அமைக்க வேண்டும். கால்வாயில் தண்ணீர் விடப்பட்ட பிறகு ஓரிரு நாட்களில் மணல் வடிகட்டி வழியாக நிலத்தடியில் நீர் சென்று இந்த கிணற்றில் நீர்மட்டம் உயருவதைக் காணலாம் என்றார்.