நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விற்பனையில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் பழிவாங்கும் நோக்குடன் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதைக் கண்டித்தும், டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய கட்சியினரை தாக்கிய காவல்துறையைக் கண்டித்தும் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்குடன் மூன்றாம் நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதைக் கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்மீதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கரூர் எம்.பி ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சின்னாளபட்டியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினருமான ராமு என்ற ராமசாமி பாய் மற்றும் தலையணையோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சாலையில் பாய்விரித்து தலையணையை தலைக்கு வைத்துப் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்குடன் விசாரணைக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றனர். மேலும் தலைமை தபால் அலுவலகத்திற்குள் போலீஸாரின் தடுப்புகளை மீறி அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது போலீஸாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரைப் போலீஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.