டெல்லியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறி விபத்திற்குள்ளானதில் இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லியில் உள்ள ஒரு நடைபாதையில் அங்குள்ள நடைபாதைவாசிகள் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் இரு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விபத்துக்குள்ளான கார் 27 வயதான தொழிலதிபர் ஒருவர் தனது மாமாவுக்காக புதிதாக வாங்கிய பி.எம்.டபிள்யூ. கார் என்பதும் கார் எவ்வளவு வேகமாக செல்கிறது என்பதை பார்ப்பதற்காக வேகமாக ஓட்டிச் செல்கையில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதும் தெரியவந்தது. இச்சம்பவம் ஜூன் 10ஆம் தேதி நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் கார் பாய்ந்து மக்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான்கான் (47) ஓட்டி வந்த டொயாட்டோ லேண்ட் குரூசர் கார், தாறுமாறாக ஓடி நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்: `வெற்றிக்கொடிக்கட்டு’ பாணியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ரூ.70 லட்சத்துக்கும் மேல் மோசடி!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM