ஜெனிவா: குரங்கு அம்மை நோய்க்கு மாற்று பெயர் வைக்க ஆலோசித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ”குரங்கு அம்மை என்ற பெயர் குறிப்பிட்ட கண்டத்தை களங்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுகுறித்து தவறான கருத்து நிலவுகிறது அதனால் இந்தப் பெயரை மாற்ற வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் விஞ்ஞானிகளின் வேண்டுகோளை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது , “ குரங்கு அம்மை ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பரவுகிறது என்ற பொதுவான எண்ணம் நிலவுகிறது. உண்மையில் இவ்வாறு சொல்வது தவறனாது. பாரப்பட்சமானது. குரங்கு அம்மை தொற்று விலங்குகளிடமிருந்துதான் மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதர்களிடமிருந்து, மனிதர்களுக்கு அரிதாகவே பரவுகிறது.
உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள், நிபுணர்களுடன் இணைந்து குரங்கு அம்மைக்கு மாற்று பெயர் வைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் புதிய பெயர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
உலக முழுவதும் இதுவரை 1,600-க்கும் அதிகமானவர்களுக்கு குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை என்பது வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய். குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ்.
குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. இருப்பினும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களை உபயோகிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்குப் பரவலாம். கரோனாவைப் போன்று, இந்த நோயும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இருமல், தும்மலின் மூலமும் மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது. ஆனால் பரவும் சதவீதம் கரோனாவைவிட மிகமிகக் குறைவுதான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.