கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்த 3 முறை கவுன்சில் கூட்டங்கள் – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மாநிலங்களுக்கு இடையேயும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயும் எழும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்த கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

விவாதிப்பதற்கான தளம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 263-வது பிரிவு, மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலை அமைக்க வழிவகை செய்கிறது. மத்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களின் பொது நலன் சார்ந்த விவகாரங்களை விவாதிப்பதற்கான தளமாக இந்தக் கவுன்சில் விளங்குகிறது. மத்திய, மாநில அரசுகள் இடையிலான, மாறுபாடான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள இந்த பொதுத்தளம் வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் இந்த கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டு மே 28-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையிலான நிரந்தர கவுன்சில் அமைக்கப்பட்டது. இதற்கான உத்தரவின் 5-வது பிரிவின் அடிப்படையில் கவுன்சில் கூட்டங்கள் ஆண்டுக்கு 3 முறை நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் ஒரேயொரு முறை மட்டும் கடந்த 2016 ஜூலை 16-ல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த மே 22-ம் தேதி இந்த கவுன்சிலை தாங்கள் மறு சீரமைப்பு செய்துள்ளீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தக் கவுன்சில் தொடங்கப்பட்டதில் இருந்து, கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் இன்றளவும் கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

எனவே, மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை அடிக்கடி நடத்தும்படி தங்களை வலியுறுத்துகிறேன். மேலும், இந்த கவுன்சில் மத்திய அரசின் செயல்பாடு, மாநில கொள்கைகள், சட்டங்கள் குறித்து மாநில முதல்வர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கவும், இதற்கான வாய்ப்பை மாநில முதல்வர்களுக்கு உருவாக்கிடவும் வேண்டும்.

சட்ட மசோதாக்கள்

தேசிய அளவில் கொண்டுவரப்படும் முக்கியமான, அதேநேரம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் ஒப்புதலுக்கு வைக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில், மாநிலங்களின் உரிமைகள், விருப்பங்களை பாதிக்கும் பல மசோதாக்கள் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விவாதிக்க உரிய வாய்ப்பளிக்கப்படாமலும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும் நிறைவேற்றப்படுவதை காண முடிகிறது. இதுதவிர சில நேரங்களில், தேசிய அளவில் ஒரு முடிவெடுக்கும்போது, அதுதொடர்பாக மாநிலங்களின் கருத்துகளைப் பெறுவதோ, அனுமதி மற்றும் ஒட்டுமொத்த ஆலோசனைகளை உரிய முறையில் அறிந்து கொள்வதோ இல்லை.

அரசுகளிடையே அமைதியின்மை

இது, அமைதியான முறையில் தீர்க்க வேண்டிய விஷயங்களை, நீதிமன்றங்களின் கதவுகளை தட்டும் அளவுக்குக் கொண்டு சென்று விடுகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளிடையே அமைதியின்மை மற்றும் கோபத்தை ஏற்படுத்த வழிவகுத்து விடுகின்றன. இவை தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை அடிக்கடி நடத்துவதன் மூலம், மத்திய, மாநில அரசுகளிடையே ஒரு பாலத்தை கட்டமைப்பதுடன், அதன் பலனை அனைத்து உறுப்பினர்களும் பெற முடியும்.

எனவே, இந்தக் கவுன்சில் கூட்டத்தின் தலைவராக இருக்கும் தாங்கள், ஆண்டுக்கு 3 முறை கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அடுத்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிப்பதற்கான தலைப்புகளை தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன், ஏற்கெனவே சொல்லப்பட்ட பிரச்சினைகளை பேசி முடிவெடுப்பதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் முதுகெலும்பாக திகழும் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்த முடியும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.