சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் எந்த கட்டத்திலும் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று கூறியதில்லை. இது தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுக்க வேண்டிய விஷயம் என்று தான் கூறி இருக்கிறேன்.
சசிகலாவை அதிமுகவில் சேர்க்கலாம் என்பது தேச விரோத கருத்து இல்லை. சசிகலாவால்தான் இபிஎஸ் முதல்வராக்கப்பட்டார். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை. 2017-ம் ஆண்டு சசிகலாவுடன் இபிஎஸ் இருந்தார். அதனால் அவர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது அந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தேன். நாங்கள் வாக்களிப்பதால் அப்போது ஆட்சி கவிழும் சூழல் இல்லை. ஒரு தனிப்பட்ட ஆதிக்கத்தின் கீழ் கட்சியும், ஆட்சியும் செல்லக்கூடாது என்பதற்காக தர்மயுத்தம் நடத்தினோம். எங்கள் எதிர்ப்பை காட்டவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.
டிடிவி.தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலராக வந்துவிட்டார். டிடிவி.தினகரன், இபிஎஸ் ஆகியோர் இடையே பிரச்சினை வந்துவிட்டது. அதன் பிறகு 36 எம்எல்ஏக்கள் டிடிவி.தினகரனிடம் சென்றுவிட்டார்கள். நான் விலகி நின்றுவிட்டேன். இவர்களுக்குள் எதனால் பிரச்சினை வந்தது என்று எனக்கு தெரியாது.
இந்த சூழலில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று டிடிவி.தினகரன் முயற்சி மேற்கொள்ளும்போது, டிடிவி.தினகரன் 36 எம்எல்ஏக்களை வைத்துள்ளார். ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று நிலைமைகளை இபிஎஸ் தரப்பினர் என்னிடம் விளக்கினர். பின்னர் யோசித்து தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிகவிழக்கூடது என்பதால் நான் ஆதரவு தெரிவித்து வாக்களித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.