பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு சிறையில் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சிறப்பு சலுகைகளை பெற்றதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா அரசுக்கு அறிக்கை அளித்தார். இதனை ஆட்சேபித்த அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் கடந்த 2017-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீது ரூ.20 கோடி நஷ்ட ஈடு வழங்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு மாநகர 9-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், உரிய விளக்கம் அளிக்கக்கோரி ரூபாவுக்கு சம்மன் அனுப்பியது. சம்மனுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றார் ரூபா.
இந்நிலையில் வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது நீதிபதி நாகபிரசன்னா, ‘இந்த விவகாரத்தில் ரூபா மீது சத்தியநாராயண ராவ் மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. எனவே ரூபா மீதான மான நஷ்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.