எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
நாகப்பட்டினம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ. 75,630 சிக்கியதைத் தொடர்ந்து இந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸார் 17 பேர் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு அதிரடியாக பணியிட மாறுதல் (டிரான்ஸ்பர்) செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய போலீஸார் லஞ்சம் பெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், டிஎஸ்பி சித்ரவேல் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஜுன் 15-ம் தேதி மதியம் இந்த காவல் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார், பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.75,630-ஐ பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி, எஸ்.ஐ. சேகர், தலைமை காவலர்கள் தேவராஜ், சரோஜினி ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய டூனிஸ்மேரி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை தொடர்ந்து, நாகை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய டூனிஸ்மேரி, எஸ்.ஐ. சேகர், தலைமை காவலர் சரோஜினி ஆகிய மூவரும் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரையும் சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக போலீஸ் டிஐஜி கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், டிஐஜியின் உத்தரவின்பேரில், இந்த்ந காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஆயுதப்படையைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் உள்ளிட்ட 17 போலீஸார் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை காவலர்கள் ரவி, கண்ணன், தர்மவதி, முதல்நிலை காவலர்கள் சசிகலா, மாலா, அனீஸ்குமார் ஆகிய 6 பேர் தஞ்சை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை காவலர்கள் கணபதி, தேவராஜ், மலர்விழி, செந்தில்குமார், மணிகண்டன், முதல்நிலை காவலர்கள் அம்பிகா, சோழவேங்கையன், இளங்கோவன், கேசவராஜ், பாக்யராஜ், வாகன ஓட்டுநர் சந்திரசேகரன் ஆகிய 11 பேர் திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“