அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரனை அவரது இல்லத்தில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.
கடந்த சில தினங்களாகவே அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்னை வலுத்து வருகிறது. இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் அ.தி.மு.க.வில் தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் இன்று மாலை வருகை தந்துள்ளனர். முன்னதாக அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரனை அவரது இல்லத்தில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். சென்னை அசோக் பில்லரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டில் 45 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அதேபோல், திருவண்ணாமலையில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை வந்தார் எடப்பாடி பழனிசாமி. வரும் வழியில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிலர் பொதுச்செயலாளர் எடப்பாடியார் என்றும் முழக்கமிட்டனர். இதனையடுத்து மாலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வந்து சேர்ந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், சிவி சண்முகம் , தங்கமணி, விஜய பாஸ்கர், காமராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேபி கந்தன், அதிமுக சென்னை மாவட்ட செயலாளர்களான பாலகங்கா, ராஜேஷ், தி. நகர் சத்யா, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி கூறுகையில், ”எந்த முடிவு எடுத்தாலும் ஒற்றுமையாக எடுக்கும்படி இரு தலைவர்களையும் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். இரு தலைவர்களுக்கும் என் ஆதரவு உண்டு” என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்: முதலில் போகப் போவது இரட்டை இலை சின்னம்!’- வாசகர்களின் கமெண்ட்ஸ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM