சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது ஒரு வீடியோ. அதற்கு காரணமே, அடுத்து நடக்க விருப்பது என்ன என ஊகிக்க முடியாத சில திக் திக் நொடிகள்தான். அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவின் சாலை வழியாக பல வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. அதே சாலை வழியின் ஓரத்தில் சைக்கிள் ஓட்டியபடி ஒருவர் செல்கிறார்.
யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அந்த நபரை உள்ளிருந்த சிறுத்தை ஒன்று பாய்ந்து தாக்கி விட்டு, மீண்டும் ஓடிவிடுகிறது. பார்க்கும் நமக்கு பதைபதைக்கிறது. அதிர்ச்சியில் நிலைகுலைந்து போன அவர் தடுமாறி கீழே விழுகிறார். சுதாரித்து, சாலையின் மறுபுறத்திற்கு வந்து, சிறுத்தை தாக்கிய இடத்தில் காயம் இருக்கிறதா என முதலில் சரிபார்த்துக்கொண்டு சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றுவிடுகிறார். இந்த நிகழ்வு ஜனவரி அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது. காசிரங்காவில் அதிகாரிகள் பொருத்தியிருந்த வீடியோவில் இந்த சம்பவம் பதிவாகி இருக்கிறது.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த ஐ.எப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், “சிறுத்தை நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளது . இருவரும் அதிர்ஷ்டசாலிகள். சிறுத்தைகள் சூழலுக்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்ளும். விவசாய நிலம், கரும்பு பயிர்கள், தேயிலை தோட்டம், மலை, காடுகள் ஏன் நகரங்களில் கூட இவை வாழும். சில நேரங்களில் இவற்றோடு ஏற்படும் தொடர்புகள் பாதுகாப்பானவை, பல நேரங்களில் மோதலை உண்டாக்கிவிடும். சைக்கிள் ஓட்டிச் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ஷ்டத்தை அவரே கூட நம்பி இருக்க மாட்டார்” எனப் பதிவிட்டு இருந்தார்.
பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகளை கண்டவர்கள் பலரும், சைக்கிள் ஓட்டி சென்றவருக்கு அன்றைய தினம் அதிர்ஷ்டம் இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் இந்நேரம் சிறுத்தைக்கு இரையாகி இருப்பார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.