காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு சுவாசக் குழாயில் ஏற்பட்ட பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, மருத்துவர்கள் ஆலோசனைப்படி, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக, காங்கிரஸ் தலைவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சோனியா காந்தியின் உடல்நலம் சீராக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தி உடல்நிலை குறித்து அக்கட்சி செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில், சோனியா காந்திக்கு சுவாசக் குழாயில் ஏற்பட்ட பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.