டெல்லியில் இன்று அதிகாலை 4:30 மணிக்கு லோதி மேம்பாலத்திற்கு கீழே `வாகன் ஆர்’ கார் ஒன்றின்மீது மற்றொரு கார் வேகமாக மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டது. மோதிய வேகத்தில் வாகன் ஆர் கார் சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். போலீஸார் விரைந்து வந்து காயமடைந்த அனைவரையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் காயமடைந்த ரோஷினி(6), அமீர்(10) ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலை நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததால் நேரில் யாரும் பார்க்கவில்லை. இதில் காயமடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது கருப்பு கலர் கார் ஒன்று மோதிவிட்டு வேகமாக சென்றது மட்டும் போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். வாகன் ஆர் காரை ஓட்டிவந்த கிஷோர் சர்மாவிடம் விசாரித்தபோது சாம்ராட் ஹோட்டலிலிருந்து வந்து கொண்டிருந்தபோது மேம்பாலத்தின் கீழே வேகமாக வந்த கருப்பு கலர் கார் தங்களது காரின்மீது மோதிவிட்டு சென்றுவிட்டது என்றும், இதனால் தங்களது கார் சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியது என்றும் தெரிவித்தார். ஒபேராய் ஹோட்டல், லோதி ரோடு, பாராபுல்லா ரோடு போன்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் ஒரு இடத்தில் விபத்தை ஏற்படுத்திய கார் சிக்கியது.
உடனே அந்த கார் உரிமையாளர் கிருஷ்ணா நகரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு போலீஸார் சென்றபோது காரை தனது உறவினர் சாஹிலிடம் சர்வீஸ் செய்வதற்காக கொடுத்திருப்பதாக தெரிவித்தார். உடனே நிர்மல் நகரில் இருந்து சாஹில் கைதுசெய்யப்பட்டார். கார் சர்வீஸ் சென்டரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சாஹிலிடம் விசாரித்தபோது காரின் வேகத்தை சோதித்து பார்த்ததாக தெரிவித்தார்.