ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை கண்டறிந்த கீ மேன் 200 மீட்டர் தூரம் ஓடிச்சென்று சிவப்பு கொடியைக் காட்டி, ரயிலை நிறுத்தியதால் சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில் விபத்திலிருந்து தப்பியது.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாலாந்தரவை ரயில்நிலையம் அருகே ரயில்வே ஊழியர் (கீ மேன்) வீரப்பெருமாள்(35) தண்டவாளங்களை சரி செய்யும் பணியில் இன்று காலை ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வாலாந்தரவை ரயில் நிலைய நடைமேடையின் மேற்குப்பகுதியில் இருந்து 30 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தின் ஒரு பகுதி துண்டாகி விரிசல் ஏற்பட்டிருந்தது.
அரை அடி நீளத்திற்கு இருந்த விரிசலை பார்த்த கீ மேன் அதை சரி செய்ய முயற்சித்தார். அதற்குள் சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் தூரமாக வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்த வீரப்பெருமாள் 200 மீட்டர் தொலைவுக்கு ஓடிச்சென்று ரயிலை நிறுத்துமாறு சிவப்புக் கொடியை காட்டினார். இதனால் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இருந்தபோதும் விரிசல் ஏற்பட்ட பகுதியை ரயிலின் இன்ஜின் உள்ளிட்ட 2 பெட்டிகள் மிக மெதுவாக கடந்து நின்றன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வழக்கமாக 90 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த விரைவு ரயில், அதே வேகத்தில் சென்றிருந்தால் ரயில் கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். தண்டவாள விரிசலால் காலை 6.55-க்கு ரயில் வாலாந்தரவை பகுதியில் நிறுத்தப்பட்டது. அதனையடுத்து கீ மேன் வீரப்பெருமாள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள் விரிசல் ஏற்பட்ட பகுதியில் தற்காலிகமாக 10 கி.மீட்டர் வேகத்தில் ரயில் செல்லும் வகையில் பிஸ்பிளேட் பொறுத்தி தண்டளாவத்தை சரி செய்தனர். அதன்பின் ரயில் காலை 7.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராமேசுவரம் சென்றது. விபத்து ஏற்படாமல் தவிர்த்த கீ மேன் வீரப்பெருமாளை வாலாந்தரவை கிராம மக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள், ரயிலில் வந்த பயணிகளும் பாராட்டினர்.
விரிசல் ஏற்பட்ட தண்டவாள பகுதியை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் பொறுத்தி அதை வெல்ட் செய்யும் பணி பகல் 2 மணியளவில் நிறைவடைந்தது. அதனையடுத்து தகுந்த வேகத்தில் அனைத்து ரயில்களும் செல்லும் வகையில் பணி முடிக்கப்பட்டது என ரயில்வே பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ரயில் விபத்தை தடுத்த கீ மேன் வீரப்பெருமாள், ”தினமும் இப்பகுதியில் 6 கி.மீட்டர் தூரம் ரயில் தண்டவாளத்தை சரி செய்வதும், பராமரிப்பதும் எனது பணி. அப்படி இன்று பணி செய்து கொண்டிருந்தபோது, வாலாந்தரவை ரயில்நிலையம் அருகிலேயே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதை சரி செய்ய முயற்சித்தபோது தூரத்தில் சென்னை-ராமேசுவரம் ரயில் வருவது தெரிந்தது. ரயில் வருவதற்கான சிக்னலும், வாலாந்தரவை ரயில்வே கேட்டும் மூடப்பட்டிருந்தது. ரயில் வந்தால் விபத்து ஏற்பட்டுவிடும் என நான் ரயிலை நிறுத்தும் வகையில் 200 மீட்டர் தூரம் ஓடி சிவப்பு கொடியைக் காட்டினேன். அதனையடுத்து ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். அதனால் ரயில் விபத்து தடுக்கப்பட்டது” என்றார்.