சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 18-ம்தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக் கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.