தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மக்கள் நலனையும், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்கவும், அதன் மூலம் தட்டுப்பாட்டை போக்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையும் என்று கூறப்படும் நிலையில், நிலைமையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் வழங்கல் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மையான எரிபொருள் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் இல்லை என்ற தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

எண்ணெய் நிறுவனங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தான் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 127 டாலர் என்ற உச்சத்தை தொட்டிருப்பது, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 78 ரூபாயை கடந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் உற்பத்திச் செலவு கடுமையாக அதிகரித் திருப்பதாகவும், அதற்கு இணையாக விற்பனை விலையை உயர்த்த மத்திய அரசு தடை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 27 நாட்களாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படாத நிலையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு முறையே லிட்டருக்கு ரூ.7, ரூ.30 வரை இழப்பு ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் நோக்குடன் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல், டீசல் அளவை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துவிட்டது தான் நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்று தெரிகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக திகழ்பவை எரிபொருட்கள் தான். மோட்டார் வாகனப் போக்குவரத்தில் தொடங்கி தொழிற்சாலைகள் வரை அனைத்துக்கும் எரிபொருட்கள் தான் முக்கிய ஆதாரம் ஆகும். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை அனைத்தின் இயக்கமும் பாதிக்கப்படும். டீசல் தட்டுப்பாடு காரணமாக விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தொடரும் பட்சத்தில் அது நாட்டின் உற்பத்தியையும், அதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாக பாதிக்கும்.

மற்றொருபுறம் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. ஆனால், தனியார் நிறுவனங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.06, டீசல் லிட்டருக்கு ரூ.33.30 கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இதனால் சரக்கு வாகனங்களின் இயக்கச் செலவு அதிகரித்திருப்பதால் காய்கறிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கக்கூடும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே பணவீக்கம் உச்சத்தை அடைந்து அதனால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த சுமையையும் தாங்க முடியாது.

மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் இந்த சிக்கலுக்கு மிகவும் எளிதாக தீர்வு காண முடியும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.90 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசலுக்கு 15.80 ரூபாயையும் கலால் வரியாக மத்திய அரசு வசூலிக்கிறது. மாநில அரசுகளும் கிட்டத்தட்ட இதே அளவு தொகையை மதிப்புக் கூட்டு வரியாக வசூலிக்கின்றன.

இந்த தொகைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிகவும் அதிகம் ஆகும். மத்திய, மாநில அரசுகள் தங்களின் வரியை கணிசமாக குறைத்துக் கொள்வதன் மூலமாகவும், எண்ணெய் நிறுவனங்களும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் தங்களின் லாபத்தை ஓரளவு குறைத்துக் கொள்வதன் மூலமாகவும் பெட்ரோல் மற்றும் டீசலை இப்போதைய விலையைவிட குறைந்த விலையில், எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் விற்க முடியும்.

மாறாக, இழப்பைக் குறைப்பதாக நினைத்துக் கொண்டு எரிபொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த முயல்வது யாருக்கும் பயனளிக்காது; அது சிறந்த பொருளாதார கோட்பாடும் கிடையாது. எனவே, மக்கள் நலனையும், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்கவும், அதன் மூலம் தட்டுப்பாட்டை போக்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.