புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக, காதலியை மிரட்டி 5 லட்சம் ரூபாய் கேட்ட நாடக காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும், திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி சேர்ந்த முகேஷ் என்ற 22 வயது இளைஞரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகின்றது.
இந்தநிலையில், முகேஷின் நடவடிக்கை எதுவும் சரியில்லாத காரணத்தினால், அவரின் காதல் நாடகத்தனமாக இருந்த காரணத்தினாலும், அந்த கல்லூரி மாணவி அவருடன் பேசுவதையும், அவரின் காதலையும் முடித்துக் கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முகேஷ், காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக கல்லூரி மாணவிக்கு அழைப்பு விடுத்து மிரட்டியுள்ளார்.
இதோடு நிற்காது நாடக காதலன் முகேஷ், மாணவி கல்லூரி விட்டு வெளியே வரும்போது அவரிடம் இருந்து இரண்டு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் கல்லூரி மாணவியின் சகோதரருக்கு போன் செய்து தனக்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
நாடக காதலன் முகேஷ் அட்டூழியங்கள், அராஜகங்கள் அதிகரித்ததால் கல்லூரி மாணவி நாகர்கோவில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து முகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.