தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்க முழு ஆதரவு வழங்கப்படும்…தெ.கொரிய தூதுவர் ஜியோங் வுன்ஜின் தெரிவிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜியோங் வுன்ஜின் (Jeong Woonjin) தெரிவித்துள்ளார்.

நேற்று (16) பிற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற புதிய ஜனாதிபதி யூன் சுக்-யெயோல் (Yoon Suk-Yeol) மற்றும் அவரது கட்சிக்கும்(People Power Party) ஜனாதிபதி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான 45 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இலங்கைக்கு தென்கொரிய அரசாங்கம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டினார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் தூதுவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி அவர்கள், தற்போதைய நிலைமையில் இருந்து மீள தென்கொரிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்குமாறும், கைத்தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு தொழில்முயற்சியாளர்களை அழைக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
17.06.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.